தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பெரியதிரைக்கு வரும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடனம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பிரபலமான ‘ஜாக்குலின்’ தான் உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தில் கதாநாயகி.
”இந்த படத்தின் ஹீரோயின் செலக்ஷன் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. வெவ்வேறு பருவங்களில் மூன்று வித்தியாசமான பரிமாணங்களில் தோன்றும் பெண்தான் என் கதையின் நாயகி.
எதை பற்றியும் கவலைப்படாத ஒரு இளம் பெண் , பிரசவ வேதனை இடையே சமுதாயத்துக்கும் , பொருளாதாரத்துக்கும் இடையே சிக்கி தவிக்கும் இளம் மனைவி , உயிரோடு இருக்கும் நோயுற்ற மகன் மற்றும் ஆவியாய் பழி வாங்க சுற்றும் மகள் ஆகியோர் இடையே பரிதவிக்கும் இளம் தாய் என்ற ஒரு தேர்ந்த நடிகைக்கே சவால் விடும் பாத்திர படைப்பு இது.
இதை சிறப்பாக செய்த ஜாக்குலினுக்கு நிச்சயம் நல்ல நடிகை என பெயர் கிடைக்கும்’ எனக் கூறினார் இயக்குனர் ஸ்ரீநாத் ராமிலிங்கம்.
சரி ஜாக்குலின் என்ன சொல்கிறார்?
‘என்னால் இப்பவும் நம்ப முடியவில்லை. நல்ல கதை , நல்ல திட்டமிடுதல் என்றாலும் இந்தக் காலக் கட்டத்தில் படம் எடுப்பதை விட ன் அதை ரிலீஸ் செய்வது தான் கடினம் என்று எல்லோரும் பயமுறுத்திய சமயத்தில் படம் பார்த்த உடனே அதை வாங்கி வெளியிடும் தேதியை குறித்த ‘ஆரா சினிமாஸ்’ மகேஷுக்கு மிக்க நன்றி.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் கூட இரவில் எனக்கு எங்கோ தொலை தூரத்தில் குழந்தை ஒன்று அழுவதை போல் காதில் கேட்கும் . யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு அச்சம். பத்திரிகைகளில் மற்ற நடிகைகள் பேய் படங்களில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது , அதை கிண்டலடித்தவள் நான்.
இப்போது எனக்கே இந்த அனுபவமா என்று சிந்திக்க தொடங்கிய போது எனக்கு தோன்றியது என்னெவென்றால், முதல் படம் என்பதால் இரவும் பகலும் முழுக்க முழுக்க இந்த படத்தைப் பற்றிய சிந்தனையில் இருப்பதால் தான் இப்படி நடக்கிறது என்று. இது கூட பரவாயில்லை, இந்த படத்தில் நடித்த பிறகு எனக்கு குழந்தைகளின் மீது அலாதி பிரியம் வர ஆரம்பித்தது . தாய்மை உணர்வும் மேலோங்க துவங்கியது . என் சகோதரியின் குழந்தையை இப்போது முன்பை விட கண்ணும் கருத்துமாக கவனிக்க ஆரம்பித்தேன். படத்தில் இரண்டு வெவ்வேறுக் கால கட்டத்தில் தாயாக நடித்த அந்த உணர்வு என்னுள் மிஞ்சி கிடப்பதை நான் உணர ஆரம்பித்தேன்.
நடன கலைகளில் ஆர்வம் கொண்டுள்ள எனக்கு நடிக்கும் போது அந்த உணர்வை புரிந்துக் கொள்ளவும் , நடிக்கவும் பெரிதும் உதவியது. சவாலான பாத்திரங்களில் சோபிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் ஜாக்குலின்.