ஒரு படம் சூப்பர் ஹிட்டானால் அதே ஹீரோ மற்றும் இயக்குநரின் காம்போவில் ரசிகர்கள் இன்னொரு படத்தை எதிர்பார்ப்பது இயல்பான விஷயம் தான்.
அதிலும் விஜய் மாதிரியான மாஸ் ஹீரோக்கள் என்றால் அவர்களின் அடுத்த படத்தை இயக்கப்போவது யாராக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வெகு சீக்கிரத்திலேயே ஏற்பட்டு விடும்.
தற்போது பரதன் இயக்கத்தில் 60வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்து விட்டதால் அவருடைய 61வது படத்துக்கான எதிர்பார்ப்பும் இப்போதே ரசிகர்கள் மத்தியில் வர ஆரம்பித்து விட்டது.
சுந்தர்.சி தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்று ஒரு தகவல் வெளியான நிலையில் அந்த செய்தி உண்மை இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. அதோடு கூடவே இன்னொரு இன்ப அதிர்ச்சி செய்தியும் வந்திருக்கிறது.
ஆமாம், விஜய்க்கு தெறி வெற்றிப்படத்தை கொடுத்த அட்லி தான் விஜய்யின் 61-வது படத்தை இயக்கப் போகிறார். அந்தப் படத்தைத் தொடர்ந்து கபாலி இயக்குநர் ரஞ்சித்தின் இயக்கத்தில் 62-வது படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்.
கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இயக்குநர் ரஞ்சித்துக்கு அடுத்ததாகவும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுக்கப் போகிறேன் என்று அதன் வெற்றி சந்திப்பு நிகழ்ச்சியில் கூறினார். அவருடைய தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் தான் விஜய்யின் 62-வது படம் தயாராகும் என்று தெரிகிறது.
இப்படி இருவருடைய படங்களிலும் நடிக்க விஜய் இப்போதே ஓ.கே சொல்லியிருப்பதால் இரண்டு பேருமே பெரும் மகிழ்ச்சியுடன் பட வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.
‘மகிழ்ச்சி’ தொடரட்டும்!