நாளை ‘புலி’ ரிலீஸ் என்றால் இன்று விஜய், நயன்தாரா, சமந்தா என சில திரையுலக பிரபலங்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.
இதனால் அக்டோபர் 1-ம் தேதிதமிழகம் முழுவதும் ஸ்பெஷல் ஷோக்களோடு ஆரம்பிக்க வேண்டிய ‘புலி’ ரெகுலர் காட்சிகளுடன் தான் ஆரம்பமானது.
மேலும் விஜய் மீது 5 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை என்று அதிகாரிகள் தகவல் வெளியிட்டதாக மீடியாக்களில் செய்தி பரவியது.
எல்லோரும் அது உண்மை என்று நம்பி வழக்கம் போல சமூகவலைத்தளங்களில் விஜய்யை ஒரு கும்பல் கலாய்த்தது.
இப்போது அந்த வருமான ஏய்ப்பு அவதூறுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் விஜய்.
அதில் விஜய் என்ன சொல்கிறார்?
‘வருமான வரித்துறையினர் கலை உலகைச் சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனையிடுவதும், தணிக்கை செய்வதும் இயல்பான ஒன்று.
கடந்த வாரம் என்னுடைய இல்லத்திலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் நான் வருமான வரி ஏய்ப்பு ஏதும் செய்துள்ளேனா?> என்று சோதனையிட்டார்கள்.
நானும், எனது குடும்பத்தாரும், எனது அலுவலர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால் சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
மேற்படி செய்தியில் சிறிதளவும் உண்மையில்லை. நான் சட்டத்தை மதித்து நடப்பவன். என்றும் சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவன். நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமானம் சம்பந்தப்பட்ட கணக்கினை குறித்த நேரத்தில் உரிய வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, அதற்குரிய வருமான வரியையும், சொத்து வரியையும், தொழில் வரியையும் முறையாக செலுத்தியுள்ளேன் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.
மேலும் நான் எப்பொழுதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். எனவே உண்மைக்கு புறம்பான தேவையற்ற வீண் கருத்துக்களை செய்தித்தாள்களிலோ, ஊடகங்களிலோ வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ இவ்வாறு விஜய் கூறியிருக்கிறார்.