எப்போதெல்லாம் விஷால் பத்திரிகையாளர்களை சந்திக்கிறாரோ? அப்போதெல்லாம் அவருடைய திருமணம் குறித்தான கேள்வி கண்டிப்பாக கேட்கப்படும்.
அவரும் ”நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டியதும் கண்டிப்பாக அங்கே என் திருமணம் நடக்கும்’ என்று சொல்லி சிரித்து சமாளிப்பார்.
நேற்று நடந்த ”துப்பறிவாளன்” டீஸர் வெளியீட்டு விழாவில் கேள்விளுக்கு இடமில்லை என்றாலும், விஷாலுடன் கூட வந்திருந்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் அவருடைய திருமணம் குறித்து கொளுத்திப் போட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிலர் விஷால் ”காமராஜர் வழியில் நடக்கிறார்; அவரைப் போலவே திருமணமே செய்ய மாட்டார் போலிருக்கிறது” என்றார்கள்.
அதற்கு பதிலளித்துப் பேசிய விஷால் “ அய்யா காமராஜர் வழியில் நடப்பது எனக்குப் பிடிக்கும், அதன்படியே நடப்பேன். ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். இல்லையென்றால் ”லட்சுமிகரமான அந்தப்பெண் கோவிச்சுக்கும், என்னை விடாது” என்றார் சிரித்துக் கொண்டே…
விஷால் சொல்கிற அந்த லட்சுமிகரமான பெண் வரலட்சுமி தான் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஊர் உலகத்துக்குத்தான் அவர்கள் இருவருக்குமான நெருக்கம் அரசல், புரசலானது என்றாலும் விஷாலைச் சுற்றியிருப்பவர்களுக்கு அது வெட்ட வெளிச்சமான உண்மை.
முன்பெல்லாம் விரைவில் திருமணம் செய்வேன், அது ஒரு நடிகையாகக் கூட இருக்கலாம் என்று மட்டும் சொல்லி வந்த விஷால் தற்போது வரலட்சுமிக்கு க்ளூ கொடுப்பது போல பேசியிருப்பது அவர் திருமணம் செய்யப்போவது வரலட்சுமியைத் தான் என்று உறுதி செய்திருக்கிறது.
தொடர்ந்து துப்பறிவாளனைப் பற்றிப் பேசிய விஷால் “நானும் இயக்குநர் மிஷ்கினும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று 8 ஆண்டுகளாகக் காத்திருந்தோம். அது தற்போது துப்பறிவாளன் என்ற அருமையான படம் மூலமாக நிஜமாகியுள்ளது. மிஷ்கின் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.
துப்பறிவாளன் திரைப்படத்தில் என்னுடைய கேரியர் பெஸ்ட் சண்டை காட்சிகளை பார்க்கலாம். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் எனக்கு துப்பறிவாளன் பாண்டிய நாடை விட முக்கியமான படமாகும்.
நானும், பிரசன்னாவும் சிம்ரன் அவர்களின் மிகப்பெரிய ரசிகர்கள். அவரோடு இந்த படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். எனக்கு துப்பறியும் நிபுணர்களின் உடல் மொழி மிகவும் பிடித்து விட்டது. பைரசி திருடர்கள் நான் பைரசி வேலை செய்யும் நபர்களை கண்டுபிடித்து விட்டேன். எனக்கு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியும். அவர்கள் யார், அவர்கள் தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை இன்னும் இரண்டு வாரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பேன்.” என்றார்.