விஷால் ஏன் அப்படி பேசினார்? : மைதானத்திலும் முடியாத அஜித் பாலிடிக்ஸ்!

‘நட்சத்திர கிரிக்கெட்’ போட்டி பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே அது சம்பந்தமான சர்ச்சைகளும் வரத் தொடங்கி விட்டன.

பால் முகவர்கள் உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த போட்டிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

”கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர், நடிகைகள் ரசிகர்களிடம் பிச்சை எடுக்கக் கிளம்பி விட்டார்கள்” என்று சமூகவலைத் தளங்களில் கடுமையான விமர்சனங்களும் விழுந்தன.

‘நட்சத்திர கிரிக்கெட்’ பற்றி அஜித்தின் கருத்து என்ற பெயரில் வைரலான செய்தி தான் அதில் ஹைலைட்.

”கிரிக்கெட் என்ற பெயரில் ரசிகர்களை வதைக்க வேண்டாம். மாறாக நாம் எல்லோரும் சேர்ந்து சொந்தப் பணத்தைப் போட்டு நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்டலாம். அதற்கு நானே முதல் ஆளாக 10 லட்சம் ரூபாய் தருகிறேன்” என்று அஜித் சொன்னதாக அந்தச் செய்தி பரவியது.

இதனையடுத்து ட்விட்டரில் நட்சத்திர கிரிக்கெட்டை கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி எல்லாமும் கலந்து அஜித் ரசிகர்கள் போட்ட கமெண்ட்டுகள் விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு பெரும் மன வருத்தத்தை கொடுத்தது.

உலக நாயகன் கமல்ஹாசன் கூட நடிகர் சங்கத்தை கட்டும் விஷயத்தில் ”நமக்கு ராமர்கள் தேவையில்லை, அணில்கள் தான் தேவை” என்று அஜித் உள்ளிட்ட நடிகர்களின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சித்தார்.

இப்படி பலத்த சர்ச்சைகளுக்கு நடுவிலும், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ‘நட்சத்திர கிரிக்கெட்’ நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

ரஜினி, கமல் மட்டுமில்லாமல் ஆந்திராவிலிருந்து பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் போன்ற முன்னணி ஹீரோக்களும், கேரளாவிலிருந்து மம்முட்டி, நிவின் பாலி போன்றோரும், கர்நாடகாவிலிருந்து அம்ரீஸ், நானி, சுதீப், புனித் ராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அதிலும் பிரபல தெலுங்கு ஹீரோவான பாலகிருஷ்ணா தான் போட்டிருந்த சட்டையை கூட கழற்றி வைத்து விட்டு பனியனோடு மைதானத்தில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.

இப்படி எதிர்பார்க்காத முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கிரிக்கெட் போட்டிக்கு வந்திருந்தாலும் விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட ஒரு சில தமிழின் முன்னணி ஹீரோக்கள் போட்டியை புறக்கணித்து விட்டார்கள்.

பாண்டவர் அணியின் முக்கிய அடையாளமான இருந்த வைகைப்புயல் வடிவேலுவும் வரவேயில்லை.

உச்சி வெயில் மண்டையைப் பிளக்க அந்த அனலிலும் அசராமல் ஹீரோக்கள் விளையாடியது வந்திருந்த சொற்ப ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியது. மாலை 3 மணிக்கு மேல் கொஞ்சம் கூட்டம் அதிகரிக்க விழாவும் களைகட்டியது.

ஸ்ரேயா உள்ளிட்ட மார்க்கெட் போன நடிகைகள் கூட தங்கள் சொந்தக் காசை செலவு செய்து நிகழ்ச்சிக்கு வந்தார்களாம்.

மைதானத்தில் சூர்யா சொதப்பலாக ஆடினாலும் போட்டி முடிவில் அவர் தலைமையிலான ‘சென்னை சிங்கம்ஸ்’ அணியே கோப்பையை கைப்பற்றியது.

அப்போது பேசிய கமல் ”இந்த நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கவும் அதில் என்னுடைய படங்களுக்கு பூஜை போடுவேன். இங்கே வெயிலில் இருக்கிறோம். ஆனால் அங்கு ஏ.சி.ஹாலில் அது நடக்கும், நடிகர் சங்க கட்டிடத்தில் இனி இப்படி பல நல்ல விஷயங்கள் நடக்கும்” என்றார்.

பின்னர் மைக்கப் பிடித்த விஷால் ”இன்னைக்கு இந்த கிரிக்கெட் போட்டி ரொம்ப சிறப்பா நடந்து முடிஞ்சிருக்குன்னா அதுக்கு ரசிகர்கள் தான். ரஜினி சாரையும், கமல் சாரையும் ஒரே மேடையில் அருகருகே பார்ப்பது அதுவும் நாங்களே பார்ப்பது அபூர்வம். அது இந்த நிகழ்ச்சி மூலம் நடந்தேறியிருக்கிறது. அது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். ஒரு நல்ல முயற்சிக்காக இந்த போட்டியை நடத்த ஆசைப்பட்டோம். நடத்தி விட்டோம். என்றவர் ”இந்த போட்டி மூலம் கிடைக்கிற எல்லா பணத்தையும் நடிகர் சங்க கட்டிடத்துக்காகத்தான் செலவிடப் போகிறோம். எந்த நடிகரோ, நடிகையோ அவர்களது வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகப்போவதில்லை” என்றார் கடுமையாக…

”நடிகர், நடிகைகள் பிச்சையெடுக்க வருகிறார்கள்” என்ற கருத்தை அஜித் ரசிகர்கள் தொடர்ந்து ட்விட்டரில் வைரலாக்கியதற்கு பதிலடியாகவே விஷாலின் இப்படி பேசியிருக்கிறார் என்று மைதானத்தில் இருந்த பலரும் பேசிக்கொண்டதை பரவலாக கேட்க முடிந்தது.

அப்போ விளையாட்டு முடிஞ்சும் சர்ச்சை முடியல, அப்படித்தானே..?

ajithkamalhaasanNadigar SangamNatchathira CricketRajinikanthvishalஅஜித்கமல்ஹாசன்நடிகர் சங்கம்நட்சத்திர கிரிக்கெட்ரஜினிகாந்த்விஷால்
Comments (0)
Add Comment