திட்டமிட்டபடி நட்சத்திர கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமான நடத்தி முடித்து விட்டார்கள் நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாக குழு!
முதலில் இப்படி ஒரு போட்டியை நடத்தப் போகிறோம் என்று அறிவித்த போதே பல அமைப்புகள் கைகளில் பதாகைகளுடன் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவ்வளவு ஏன் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற அன்று கூட சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றுகைடும் சம்பவமும் நடந்தேறியது.
அதோடு விட்டதா தொல்லை என்றால் அதுதான் இல்லை.
அஜித் ரசிகர்கள் நட்சத்திர கிரிக்கெட் பற்றி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மட்டமாக கருத்துகளை தெரிவித்தார்கள். குறிப்பாக விஷாலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டுவது, எச்சரிக்கை விடுவது என வேண்டாத செயல்களால் இழிவுபடுத்தினார்கள்.
இப்படி நாலாபுறமும் வந்த சர்ச்சைகளையும் மீறி கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் போட்டியை நடத்தி வெற்றி பெற்று விட்டார்கள்.
அந்த வெற்றியை இன்று நிருபர்களுடன் நடிகர் சங்கம் சார்பில் பகிர்ந்து கொண்டார்கள் நடிகர் சங்கத் தலைவர் நாசர், விஷால், கார்த்தி மற்றும் பொன் வண்ணன் நால்வரும்!
நிகழ்ச்சியில் ”கட்டிடம் கட்டுவதற்கு மொத்தம் 28 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. முதல் கட்டமான 8 கோடி ரூபாய் வந்திருக்கிறது. அப்படியே இன்னும் மூன்று கட்டங்களாக 8 கோடி ரூபாயை நாங்கள் திரட்டப் போகிறோம். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது” என்று நடிகர் சங்கத்தின் அடுத்தடுத்த திட்டங்களை சுருக்கமாக விவரித்தார் பொன் வண்ணன்.
பின்னர் பேசிய விஷாலிடம் நோக்கிப் பாய்ந்த முதல் கேள்வியே அஜித்துடன் ஏற்பட்டதாக பரப்பப்பட்டு வந்த உரசல் பற்றிய கேள்வி தான்.
தேர்தலில் ஓட்டு போட வரவில்லை, நடிகர் சங்க பொதுக்குழுவுக்கும் வரவில்லை, நட்சத்திர கிரிக்கெட்டுக்கும் வரவில்லை இப்படி அஜித் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வராமல் புறக்கணிக்க காரணம் என்ன? அவருக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?
இந்தக் கேள்விக்கு தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக பதில் சொன்னார் விஷால்.
எனக்கும், அஜித்துக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவரும் நானும் எப்போதுமே நல்ல நண்பர்கள் தான். ஐ லவ் அஜித். கிரிக்கெட் போட்டி நடந்த போது அவர் சொன்னதாக வந்த செய்திகள் எல்லாமே ட்விட்டரில் திட்டமிட்டு பரப்பப்பட்டவை. அவர் எதுவுமே சொல்லவில்லை. நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக அவர் மீது தனிப்பட்ட கோபம் எல்லாம் இல்லை. அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்து நான்கைந்து வருடங்கள் ஆகி விட்டது. ஏதோ நடிகர் சங்க நிகழ்ச்சிக்கு மட்டும் அவர் வர மாட்டேன் என்று சொல்லவில்லை. பொதுவாகவே அவர் எந்த ஒரு பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.
ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு. அதில் யாரும் தலையிட முடியாது. அவர் மீது மட்டுமில்லை, விஜய் உள்ளிட்ட யார் மீதும் கோபம் இல்லை. வந்தவர்களால் சந்தோஷமும் இல்லை, வராதவர்கள் மீது கோபமும் இல்லை. நடிகர் சங்கத்தில் எல்லோரையும் சமமாகத்தான் பார்க்கிறேன். ஏனென்றால் இது என் வீட்டு நிகழ்ச்சியில்லை. நடிகர் சங்கத்துக்காக நடக்கும் ஒரு பொதுவான நிகழ்ச்சி. அப்படி இருக்கும் போது நான் எப்படி மற்றவர்கள் மீது தனிப்பட்ட முறையில் கோபப்பட முடியும்? சக நடிகர்களுடன் சண்டைப் போடுவதற்காக பதவிக்கு வரவில்லை. எனக்கு ரஜினி, கமல், விஜய் அஜித் எல்லோரையும் பிடிக்கும் என்றவர் மீடியாக்களையும் ஒரு பிடி பிடித்தார்.
இந்த விஷயத்தில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளிதழ் செய்தது எனக்கு ரொம்ப வருத்தத்தை தந்தது. அதில் முதல் பக்கத்திலேயே நடிகர் சங்க நிகழ்ச்சியில் அஜித்தின் பாடலை ஒளிபரப்ப விஷால் தடை விதித்தார் என்று செய்தி வெளியிட்டார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. அது முற்றிலும் தவறான செய்தி. அப்படி நிறுத்தினால் முதலில் என் படப்பாடலைத்தான் நிறுத்துவேன். மற்றபடி சக நடிகர்களின் மனதை புண்படுத்தவே மாட்டேன். தயவுசெய்து இனிமேலாவது கை நீட்டும் தூரத்தில் இருக்கும் என்னை தொடர்பு கொண்டு கேட்டுவிட்டு எந்த செய்தியையும் வெளியிடுங்கள் என்றார்.
மொத்தத்தில் விஷாலை எதிரியாகவே பார்த்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களின் வாயை ஐ லவ் அஜித் என்கிற ஒரே ஒரு வார்த்தையால் அடைத்து விட்டார் விஷால்!