தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக பொறுப்பேற்றதும் முதல் தலையாய பணியாக வரும் மே 30-ம் தேதி முதல் ”காலவரையற்ற வேலை நிறுத்தம்” நடைபெறும் என்று சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார் விஷால்.
திருட்டு விசிடியை ஒழிப்பது, சேவை வரியைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக இந்த வேலை நிறுத்தப் போராட்டம் என்றும் தெரிவித்தார்.
விஷாலின் இந்த அறிவிப்புக்கு ஆரம்பம் முதல் இருந்தே திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
குறிப்பாக விஷாலின் இந்த அறிவிப்பு தன்னிச்சையானது என்றும், இதுபோன்ற முடிவுகளை திரையுலகில் இருக்கின்ற மற்ற சங்கத்தினரையும் அழைத்துப் பேசி முடிவு செய்வது தான் வாடிக்கையான ஒன்று என்றும், அதனால் விஷால் எடுத்த இந்த தன்னிச்சையான முடிவை பலரும் எதிர்த்தனர்.
அதன் முதல் அடியாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், வழக்கம் போல தியேட்டர்கள் திறந்திருக்கும் என்று அறிவித்தனர். தொடர்ந்து தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று நேற்று அறிவித்தனர்.
இந்நிலையில் இன்று மாலை கூடிய தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டத்தில் வேலை நிறுத்தம் பற்றி காரசாரமான விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் விஷாலின் போராட்டத்துக்கு ஆதரவை விட எதிர்ப்பு தான் அதிகமாக இருந்ததாம்.
அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.
ஒருபுறம் விஜய்யின் தளபதி 61, அஜித்தின் விவேகம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் தலைவர் 161 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் ஆரம்பமாக இருக்கிறது. சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம்ரவி நடிப்பில் அதிக பொருட்செலவில் சங்கமித்ரா படத்தின் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இப்படி முன்னணி நடிகர்களின் படங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருப்பதால் வேலை நிறுத்தம் நடைபெறும் பட்சத்தில் இந்தப் படங்களை வட்டிக்கு பணம் வாங்கி எடுத்து வரும் தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டம் வரும்.
அதேபோல டஜன் கணக்கில் சிறு முதலீட்டுப் படங்கள் படப்பிடிப்பு முடிந்து, தொழில்நுட்ப வேலைகளும் முடிந்து பாகுபலி ரிலீசால் தியேட்டர்கள் கிடைக்காமல் ஜூன், ஜூலையில் ரிலீசை தள்ளி வைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்படும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் விஷாலின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவை விட எதிர்ப்பு அதிகமானதாம். அதே சமயம் விஷாலின் போராட்டத்துக்கு நாம் ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம் கூட்டத்தில் பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அவரின் கருத்தை சிலர் ஆமோதித்தாலும் வேலை நிறுத்தம் செய்ய இது சரியான காலச்சூழல் இல்லை என்றும், இன்னொரு நாள் திரையுலகின் அனைத்து சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி போராட்டம் நடத்தலாம் என்று பேசப்பட்டிருக்கிறது.
இதையடுத்தே வேலை நிறுத்தம் என்ற தனது உறுதியை தளர்த்தி கைவிடப்படுவதாக அறிவித்தாராம் விஷால்.
ஆக போராட்டம் இப்போதைக்கு இல்லை, ஆனால் இன்னொரு நாள் கண்டிப்பாக உண்டு என்பது மட்டும் உறுதி.