‘வீரம்’ படத்தில் தம்பி செண்டிமெண்ட், வேதாளத்தில் தங்கை செண்டிமெண்ட் என தர லோக்கலாக பிலிம் காட்டிய சிவாவின் இயக்கத்தில் மனைவி செண்டிமெண்ட்டோடு இண்டர்நேஷனல் இம்சையாக வந்திருக்கும் படம் தான் இந்த ‘விவேகம்’.
படம் முழுக்க ஹாலிவுட் படத்தைப் பார்த்த உணர்வைத் தருவதற்கு பல தொழில்நுட்பங்களை கையாண்டிருக்கும் சிவா, திரைக்கதை அமைத்த விதத்தில் தர லோக்கலுக்கும் கீழே என்பதை நிரூபித்திருக்கிறார். (ஒன்றிரெண்டு சீன்லயாவது லாஜிக் வேண்டாமா பிரதர்?)
சரி கதைக்கு வருவோம்…
வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதக் கும்பல் இந்தியாவில் ஏற்கனவே செய்த ஒன்றைப் போல இன்னும் செயற்கையான இரண்டு பூகம்பத்தை உருவாக்க திட்டம் போடுகிறார்கள்.
தீவிரவாதிகள் போடுகிற அந்த அணு ஆயுத சதித் திட்டம் செர்பியா நாட்டில் செயல்படும் சர்வதேச தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு தெரிய வருகிறது. உடனே அந்த நாச வேலையை முறியடிக்கும் பொறுப்பு அங்குள்ள ஒரே நேர்மையான அதிகாரியான அஜித்திடம் கொடுக்கப்படுகிறது. அவரோ தன்னோடு விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட நான்கு பேர்களை சேர்த்துக் கொண்டு ஒரு டீமாகக் கிளம்புகிறார்.
போகிற வழியில் முதல் அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்தது ஹேக்கர் எக்ஸ்பர்ட்டான அக்ஷரா ஹாசன் தான் என்று தெரிய வர, அவரைத் தேடிக் கண்டுபிடித்து அவரை வைத்தே மீதமுள்ள இரண்டு அணு ஆயுதங்களை வெடிக்க விடாமல் செய்ய நினைக்கிறார் அஜித். ஆனால் அவரைக் கூட்டிப் போகிற வழியிலேயே சுட்டுக் கொல்லப்படுகிறார்.
அதைத் தொடர்ந்து தனது டீமில் எந்தெந்த அதிகாரிகளை தன்னோடு சேர்த்துக் கொண்டாரோ? அவர்களே அஜித்தை கொலை செய்யும் வெறியோடு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
அவர்கள் குண்டுகளிலிருந்து அசால்ட்டாக உயிர் பிழைக்கும் அஜித் நண்பராகப் பழகி துரோகம் செய்யும் விவேக் ஓபராய் உள்ளிட்ட அந்த அத்தனை சக அதிகாரிகளையும் எப்படி பழி வாங்குகிறார்? சர்வதேச தீவிரவாதிகளின் அணு ஆயுத சதியை எப்படி முறியடிக்கிறார்? என்பதே கிளைமாக்ஸ்.
கதை செர்பியாலில் ஆரம்பமாகிறது என்பது மட்டும் தான் படம் ஆரம்பிக்கும் போது தெரிகிறது. அதன் பிறகு வரும் காட்சிகள் எந்த நாட்டுக்கு போகிறது, வருகிறது என்பது படத்தை இயக்கிய சிவாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அந்த ஆரம்ப நீளமான சண்டைக்காட்சியில் பல அடுக்குகளை பாதுகாப்புகளையும் தாண்டி ஒற்றை ஆளாக அஜித் செல்வதில் ஆரம்பிக்கிற லாஜிக் மீறல் படம் முழுக்க பரவி நம்மை பயமுறுத்துகிறது.
ஒரு ஏரியாவைக் காட்டும் போது அது எந்த இடம் என்று டைட்டில் போடுகிறார்கள். அதை உற்றுப் பார்த்து வாசிப்பதற்குள் டக்கென்று காணாமல் போய் விடுகிறது. பொதுவாக விஜய் படங்களில் ஒரு பாடல் காட்சி வந்தால் ‘இந்தப்பாடலை பாடியவர் உங்கள் விஜய்’ என்று பெயர் போடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் தான் முதல் முறையாக ஒரு முழுப்பாடலுக்கும் கீழே தமிழில் சப் டைட்டில் போட்டு பேரதிர்ச்சியைக் கொடுக்கிறார்கள்.
படத்தின் பெயர் விவேகம், படத்தில் காஜல் அகர்வாலின் கேரக்டர் பெயர் யாழினி இந்த இரண்டு மட்டும் தான் படத்தில் தமிழே தவிர, மீதி தொன்னூத்துச் சொச்சம் காட்சிகள் ஆங்கிலம் தான். கண்ணில் படுகிற எல்லோரும் சகட்டு மேனிக்கு ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். அல்லது அவரவர்களுக்கு தெரிந்த மொழிகளில் பேசுகிறார்கள். எல்லாவற்றுக்கும் தமிழில் சப் டைட்டில் போடுகிறார் டைரக்டர். சரி அதையாவது சரியாகச் செய்தாரா? அதிலும் ஆயிரம் எழுத்துப் பிழைகள்!
கட்டுமஸ்த்தான உடல், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் என சிவா இயக்கத்தில் அஜித் நடித்த முந்தைய இரண்டு படங்களை விட, இதில் எக்ஸ்ட்ராவாக உழைப்பை கொட்டியிருக்கிறார். ஆனாலும் என்ன பிரயோசனம்? எல்லாமே விழலுக்கு இறைத்த நீர் போல முழுமையாக வீண்.
‘பஞ்ச் டயலாக்’ என்று அவர் நிறுத்தி நிதானமாகப் பேசுகிற வசனங்கள் ஒவ்வொன்றும் ஏதோ தமிழ் வார்த்தைகளை எழுத்துக் கூட்டி படிக்கக் கற்றுக் கொண்டிருப்பவரைப் போல கதறத் தோன்றுகிறது. ( ஒருவேளை இதுக்குப் பேர் தான் விவேகமோ…? )
அன்பான மனைவி கேரக்டரில் கை முட்டியைக் கூட படம் முழுக்க போர்த்திக் கொண்டு வருகிறார் காஜல் அகர்வால். ஸ்வெட்டர் பின்றதுக்கும், பாரதியார் பாட்டு சொல்லிக் கொடுக்குறதுக்கும் ஏன்யா காஸ்ட்லி சம்பளம் கேட்கிற காஜல் அகர்வால்? அதுக்குப் பேசாம லட்சுமி ராமகிருஷ்ணனையோ, சுதா ரகுநாதனையோ அஜித்துக்கு ஜோடியாக்கியிருக்கலாம்.
கிளைமாக்ஸில் அஜித் சீரியஸாக வில்லனோடு மோதிக்கொண்டிருக்கும் போது காஜல் கோப முகத்தோடு பாடுகிற பாட்டு பார்க்கிற ரசிகர்களுக்கு சிரிப்பைத்தான் வரவைக்கிறது. கருணாகரன், லொள்ளு சபா சாமி நாதன் ஆகியோர் இருந்தும் படத்தில் ரசிகர்கள் சிரிக்கிற காட்சி என்றால் அது காஜல் பாட்டு பாடுகிற இந்தக் காட்சி தான்.
பெரிய பில்டப்போடு அக்ஷரா ஹாசனுக்கு இண்ட்ரோ வைத்திருக்கிறார்கள். சரி என்னமோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் அடுத்த சில நிமிடங்களில் அவரையே ‘செஞ்சி’ அனுப்பி விடுகிறார்கள். இருந்தாலும் அவர் வருகிற அந்த ஒரு சில காட்சிகள் மனசுக்கு ஆறுதல்.
இடைவேளைக்கு முன்பு வரை நண்பனாக வரும் விவேக் ஓபராய் இடைவேளைக்குப் பிறகு வில்லனாகி விடுகிறார். பொதுவாக ஹீரோ என்ன செய்தாலும் நம்மை இப்படி இம்சிக்கிறானே? என்று வில்லனுக்கு கோபம் தான் வரும், ஆனால் இதில் அஜித் என்ன செய்தாலும் அவருடைய ரசிகரைப் போலவே வியக்கிறார் ஓபராய்.
படத்தில் பாராட்டக்கூடிய ஒரு சில சமாச்சாரங்களில் ஒளிப்பதிவாளர் வெற்றியின் உழைப்பு. செர்பியா உள்ளிட்ட வெளிநாடுகளின் பிரம்மாண்ட அழகை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். சேஸிங் காட்சிகளில் கேமரா விளையாடியிருக்கும் விதம் அசத்தல்.
தீவிரவாத எதிர்ப்புப் படை என்று காட்டப்படுகிற அந்த கட்டிடத்தின் உள் அழங்கார அமைப்பு, அதற்குள் அவ்வப்போது காட்டப்படும் தொடு திரை உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இவை எல்லாவற்றிலும் ஆர்ட் டைரக்டர் மிலனின் உழைப்பு படத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் தனித்துத் தெரிகிறது.
கணேஷ் கலோயன் சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் லெவலுக்கு இருந்தாலும் எத்தனை பேர் சுட்டாலும் அத்தனை குண்டுகளிலிருந்தும் அஜித் எளிதாகத் தப்பித்துச் செல்வதெல்லாம் டூ மச்!
அனிருத்தின் பின்னணி இசை ஆக்ஷன் படத்துக்கே உரிய மிரட்டல். ‘சர்வைவா…’ பாடல் ஒரு ஆங்கில பாப் பாடல் போல இரைச்சல், ஆதலால் ஓரளவுக்கு கேட்கும்படி இருப்பது ‘காதலாட’ பாடல் மட்டும் தான்.
”ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ்ப்படம்!” எடுக்க நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. கோலிவுட்டின் நெக்ஸ்ட் லெவல் அதுதான். ஆனால் அது பி அண்ட் சி செண்டர் ரசிகர்களுக்கும் புரியும்படி எளிமையான கதையம்சத்தோடு இருக்க வேண்டும். இந்தப்படம் ஏ செண்டர் ஆடியன்ஸுக்கே புரியுமா? என்பது பெருத்த சந்தேகம்.
ஒரே ஹீரோவை அடுத்தடுத்து இயக்குகிற வாய்ப்பு ஒரு இயக்குநருக்கு கிடைத்தால் அவரும் அந்த ஹீரோவுக்கு ரசிகராகவே மாறி விடுவார் என்பதற்கு இந்தப்படம் மிகச்சிறந்த உதாரணம். அந்தளவுக்கு படம் முழுக்க அஜித் புகழை மூச்சு விடாமல் பாடியிருக்கிறார் இயக்குநர் சிவா.
அஜித்துக்கு காட்டிய அந்த நன்றி விசுவாத்தை கொஞ்சமேனும் திரைக்கதையை அமைப்பதில் மூளையை யோசிக்க விட்டிருந்தால் இரண்டு வருடங்கள் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அஜித்துக்கே இது ஒரு செம ட்ரீட்டாக இருந்திருக்கும்!