சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘விவேகம்’ படம் மிகப்பெரிய தோல்விப்படமாகி விட்டது.
இதனால் அடுத்த படத்தை மிகப்பெரிய ஹிட் படமாகத் தர வேண்டும், அதற்கு அஜித், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற இயக்குநருடன் இணைய வேண்டும் என்றெல்லாம் சமூகவலைத்தளங்கள் மூலமாக கோரிக்கை வைத்தார்கள்.
இருந்தாலும் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை மீண்டும் இயக்குநர் சிவாவுக்கே கொடுத்திருக்கிறார் அஜித். ‘விஸ்வாசம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.
தொடர்ந்து நான்காவது முறை சிவாவுடன் அஜித் இணைகிறார் என்கிற இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் அஜித் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகி விட்டது.
படுதோல்வி கொடுத்த இயக்குநருடன் மீண்டும் தல அஜித் இணைகிறாரே என்று அவர்கள் விஸ்வாசம் படத்தைப் பற்றி கோபத்துடன் விமர்சித்தும் வருகிறார்கள்.
முன்னதாக ”சிவா பல கதைகளை என்னிடம் சொன்னார். நான் தான் விவேகம் படத்தின் கதையை தேர்ந்தெடுத்து அதில் நடிக்க சம்மதம் சொன்னேன். அதனால் அந்தப் படத்தின் தோல்விக்கும் நான் தான் காரணம், சிவா காரணம் அல்ல” என்று அஜித் சொன்னதாக தகவல் வெளியானது.
ஆனால் தற்போது ‘சிவா எனக்கு ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார், அவர் அடுத்து ஒரு ஹீரோவுக்காக படம் இயக்கச் செல்லும் போது ஹிட் படம் கொடுத்த டைரக்டர் என்கிற பெயரோடு செல்ல வேண்டும். அதனால் தான் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன்” என்று அஜித் சொன்னதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சிவாவுடன் அஜித் மீண்டும் இணைய இதுதான் உண்மையான காரணமாம்.
அஜித் கொடுத்த இன்னொரு வாய்ப்பு என்பதால் எப்படியாவது ‘விஸ்வாசம்’ படத்தை ஹிட்டாக்கி, அஜித் ரசிகர்களிடையே தனக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை மாற்றியே தீர வேண்டும் என்கிற பெரும்பொறுப்பில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறாராம் இயக்குநர் சிவா.