தொடரும் சினிமா ஸ்டிரைக் – ‘காலா’ நஷ்டத்திலிருந்து மருமகனை காப்பாற்றிய ரஜினி!

கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களின் சேவைக் கட்டணத்துக்கு எதிராக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.

அதன்படி மார்ச் 1-ம் தேதியிலிருந்து எந்த புதிய தமிழ்ப்படமும் ரிலீசாகவில்லை. இந்த விவகாரத்தில் டிஜிட்டல் நிறுவனங்கள் பக்கமே தியேட்டர் உரிமையாளர்களும் சாய்ந்து விட்டார்கள்.

இரண்டாவது வாரமாக புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் தியேட்டர்கள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஆனால் அந்த உண்மையை மறைத்து விட்டு தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி வருகிற மார்ச் 16-ம் தேதி முதல் தியேட்டர்களை மூடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

இதற்கிடையே தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் டிஜிட்டல் நிறுவனங்களின் அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை புதுப்படங்களை ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தை தொடர்வது என்றும், நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை வருகிற மார்ச் 16-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலும் சினிமா சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகள் நடைபெறக் கூடாது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள், ஆடியோ ரிலீஸ் பங்ஷன் என எந்த ஒரு திரையுலக நிகழ்வும் நடைபெறக்கூடாது என்றும் முடிவு செய்திருக்கிறார்கள்.

ரஜினியின் ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீசாகும் என்று ஏற்கனவே தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவுக்கு ரஜினி ஆதரவு தருவாரா? என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால் அவரோ நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு என்று தெரிவித்து விட்டார்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது ரஜினியின் பெருந்தன்மையை காட்டுவதாகத் தெரிந்தாலும் ‘காலா’ விஷயத்தில் தனது மருமகன் தனுஷை ரஜினி காப்பாற்றி விட்டார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

ஆமாம், ‘காலா’ படத்தை தனது உண்டர்பார் புரொக்டஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார் தனுஷ். அவரே ரிலீஸ் செய்வதாக முடிவு செய்திருந்தால் திரையுலக போராட்டத்தால் ஏற்படும் கால தாமதத்துக்கு தான் வாங்கிய கடனுக்கு ரிலீஸ் வரை வட்டி கட்ட வேண்டிய சூழல் தனுஷூக்கு வந்திருக்கும்.

தற்போது அந்தப் படத்தை ஒரு பெரும் தொகையை லாபமாக வைத்து பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு 125 கோடி ரூபாய்க்கு விற்று விட்டார்.

இதனால் போராட்டம் இன்னும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்தாலும் தனுஷூக்கு பிரச்சனையில்லை. இப்படி காலா ரிலீசில் மருமகன் தனுஷ் தப்பித்து விட்டதால் தான் தயாரிப்பாளர் சங்கப் போராட்டத்துக்கு முழு ஆதரவை தெரிவித்தாராம் ரஜினி.

எல்லாத்துக்கு ஒரு கணக்கு இருக்குன்னு சும்மாவா சொல்றாங்க?

Dhanushkaalakaala releaseProducer Councilrajinitamil film producer council
Comments (0)
Add Comment