பொதுவாக எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதில் கடைசி வரை முட்டி மோதிப்பார்ப்பது என்று களமிறங்கும் விஷால் நடிகர் சங்கச் செயலாளர் பொறுப்புக்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு அடியையும் பார்த்து தான் எடுத்து வைக்கிறார். அதே சமயம் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவராக தயாரிப்பாளர் சங்கத்தைப் பற்றி சில அவதூறான கருத்துகளை ஒரு பிரபல வாரப்பத்திரிகையில் சொன்னார்.
அவ்வளவு தான். கொதித்தெழுந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் விஷால் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் இல்லையென்றால் அவரை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கூடி முடிவெடுத்தனர். விஷால் மன்னிப்பு கேட்காததால் சங்கத்தைப் பற்றி அவதூறாகப் பேசினார் என்று அவரை இடை நீக்கமும் செய்தார்கள்.
இதை எதிர்த்து நீதிமன்றம் போன விஷாலிடம் அவர் மன்னிப்பு கேட்டால் மீண்டும் சங்கத்தில் அவரைச் சேர்த்துக் கொள்ள தயக்கம் இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இதையடுத்து விஷால் மன்னிப்பு கேட்க ஒப்புக் கொண்டதையடுத்து இந்தப் பிரச்சனை இன்னும் ஒரு வாரத்துக்குள் தீரும் என்று தெரிகிறது.
அதே சமயம் இந்த விவாகரத்தில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை மனதில் வைத்துத்தான் விஷால் முரண்டு பிடிக்காமல் மன்னிப்பு கேட்க ஒப்புக்கொண்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
தனது அணி சார்பில் நடிகை குஷ்புவை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு களம் இறக்கி விட்டிருக்கிறார் விஷால். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமானால் பெரும்பான்மை ஓட்டுகள் தேவைப்படும். ஆகையால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிராகப் பேசிய இந்த விவாகரத்தில் முரண்டு பிடிக்காமல் வளைந்து கொடுத்துப் போவதே ஓட்டுகளைப் பெற சரியான வழியாக இருக்கும் என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தரப்பில் ஆலோசனைகள் சொல்லப்பட்டதாம்.
இதையடுத்தே விஷால் தயாரிப்பாளர் சங்க வழக்கில் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.