திரைப்படமாக உருவான எழுத்தாளர் பூமணியின் ‘கசிவு’ நாவல் !

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய கசிவு என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது.
தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்க விஜயலட்சுமி, ஹலோ கந்தசாமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் வரதன் செண்பகவல்லி இயக்கியுள்ளார். வெற்றிச்செல்வன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ள இந்த படம் அக்-23 இரவு முதல் ஓடிடி பிளஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இதனையடுத்து இந்த படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று (அக்-23) மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் பூமணி, இயக்குனர்கள் சுப்பிரமணிய சிவா, அஜயன் பாலா, கேபிள் சங்கர் மற்றும் ராப் பாடகர் அறிவு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாக கசிவு திரைப்படம் பத்திரிக்கையாளர்களுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் நடிகர் எம்.எஸ் பாஸ்கர் பேசும்போது,
“கரிசல் எழுத்தாளர்கள் என்றால் கி.ராஜநாராயணன், பூமணி இவர்கள்தான் முதலில் நினைவுக்கு வருவார்கள். என்னிடம் பூமணியின் இந்த கசிவு நாவலில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் வரதன் சொன்னபோது, அதனாலேயே உடனே ஒப்புக்கொண்டேன். இந்த படப்பிடிப்பு நடைபெற்ற கிராமம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் கொஞ்சம் நேரம் கிடைத்தபோது மாட்டு கொட்டகையில் சிறிது நேரம் படுத்து தூங்கினேன்.
என்னைப் பொறுத்தவரை ஆதாயத்துக்காகவும் நடிக்கணும்.. ஆத்ம திருப்திக்காகவும் நடிக்கணும்.. கசிவு திரைப்படம் அப்படி ஆத்ம திருப்திக்காக நடித்த படம் தான். சொர்க்கம், நரகம் என்பது நாம் இறந்த பின்னால்தான் என்பது இல்லை. இங்கேயே இருக்கிறது. நாம் செய்த தப்பு கடைசி வரை உறுத்திக் கொண்டே இருக்கும். அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட படம் பார்ப்பதால் எல்லோரும் திருந்தி விட முடியாது. காரணம் எவ்வளவோ சட்ட திட்டங்கள் வந்துவிட்டாலும் முன்பை விட இப்போது குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. எனக்கு இதுபோல நல்ல நல்ல கதாபாத்திரங்களாக தாருங்கள். என் நடிப்பை இன்னும் நான் மெருகேற்றிக் கொள்கிறேன். எழுத்தாளர் பூமணி ஐயாவின் எழுத்துக்களை பேசி நடித்ததே எனக்கு இன்னொரு தேசிய விருது கிடைத்தது போல தான்” என்று கூறினார்.