மகாசேனா- விமர்சனம்

காட்டிலுள்ள குரங்கனி மலை கோவிலின் சிலையைத் திருடும் முயற்சியும், அதைத் தடுக்கும் சக்தியும் தான் மகாசேனா
மலையடி வாரத்தில் வாழும் இரு இனக்குழுக்கள். அவர்களுக்குள் சாமிசிலை சம்பந்தமாக ஒரு ஜென்மப்பகை இருக்கிறது. அந்தப் பகையின் முடிவு என்ன என்பது தான் மெயின்கதை. ஆனால் அந்த மெயின் மேட்டருக்குள் வருவதற்குள் படம் எங்கங்கோ சுற்றுகிறது
விமல் சற்றும் பொருத்தமில்லாத கேரக்டரில் பொருந்திப் போக முயற்சித்துள்ளார். துளியும் ஆர்வமில்லாத நடிப்பே அவரது உடல்மொழியில் தெரிந்தது. ஸ்ருஷ்டிடாங்கே கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தலைவியை தோற்றத்தில் கொண்டுவந்துள்ளார். ஆனால் நடிப்பில் அவரால் கொண்டுவர இயலவில்லை. பாரஸ்ட் ஆபிசரான ஜான் விஜய் கடைசி காட்சிகளில் மட்டும் மிரட்டியுள்ளார். படத்தின் மெயின் வில்லன் என கடைசியில் காட்டப்படும் கபீர் துஹான் சிங் கடைசியில் தான் வருகிறார். மஹிமா குப்தா எதோ வில்லியாக மாஸ் காட்ட முயற்சித்துள்ளார். யோகிபாபு கிளைக்கதை ஒன்றில் வந்து அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார். மற்றும் பலரில் நிறைய பேர் நடித்துள்ளார்கள். அனைவருமே ஒகே ரகம் தான்
A.பிரவீன் குமாரின் இசையில் சிவன் பாடல் ஒன்று படத்தில் எனர்ஜி கூட்டுகிறது. உதய்பிரகாஷ் U.P.R-ன்பின்னணி இசையும் பரவாயில்லை. காமெடி காட்சிகளில் மட்டும் பேக்ரவுண்ட் ஸ்கோர் எடுபடவில்லை. ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு D R தனது திறமையை நிறைய நல்ல ஷாட்கள் மூலம் காட்டியுள்ளார்.
இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் “சாமி சிலையை கைப்பற்ற நினைக்கும் அதிகார வர்க்கம், அதை எதிர்த்துப் போராடும் எளிய மக்கள்” என்றளவில் மட்டுமே இக்கதையைக் கொண்டு போயிருக்கலாம். நிறைய கிளைக்கதைகளை சொருகி இருப்பதால் படம் சொல்ல வரும் எமோஷ்னல் கன்வே ஆகவில்லை. ரைட்டிங்கில் உள்ள குழப்பத்தால் தியங்கி திசை தெரியாமல் ஓடுகிறது இந்த மகாசேனா
2.25/5