ஏன்யா… ரஜினி, கமலை நம்பி உங்க காசை விடுறீங்க..? : ஆடியோ பங்ஷனில் பரபரப்பை கிளப்பிய எழுத்தாளர்

Get real time updates directly on you device, subscribe now.

rajini1

மிழகத்தில் இன்றளவும் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் பிரபலமாக இருக்கும் கோலிக் குண்டு விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘ஒன்பது குழி சம்பத்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.

திரைப்பட இயக்குநர்கள் சுசீந்திரன், குழந்தை வேலப்பன், கமலக்கண்ணன், கேபிள் சங்கர், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், ஒளிப்பதிவாளர்கள் ஜீவன், கோபி சுந்தர், இசை அமைப்பாளர் ஜூபின், தயாரிப்பாளர் செல்வக்குமார் மற்றும் திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.

தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக ஒப்பாரி பாடல் ஒன்று இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடலை பிரபல எழுத்தாளரான கண்மணி குணசேகரன் எழுதியுள்ளார்.

'எழுத்தாளர்' கண்மணி குணசேகரன்
‘எழுத்தாளர்’ கண்மணி குணசேகரன்

அந்தப் பாடலை எழுதிய கண்மணி குணசேகரன் பேசும் போது முன்னணி நடிகர், நடிகைகளை கடுமையாக சாடினார்.

“அஜித், நயன்தாரா, வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமானை போட்டு படம் எடுத்து ஜெயிக்கிறது பெரிய வெற்றியல்ல. இலக்கியப் பூர்வமான, உணர்வுப் பூர்வமான, கலைநயம் ததும்பும் நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படங்களை தயாரித்து அதில் ஜெயிப்பது தான் உண்மையான வெற்றி. அந்த வகையில் இந்த படத்தின் தயாரிப்பாளரை வெகுவாகப் பாராட்டுகிறேன்.

ரஜினி மற்றும் கமல் படங்களில் காசை விடும் விநியோகஸ்தர்கள் இந்தப் படத்தையும் கொஞ்சம் பாருங்க. இந்த மாதிரி நல்ல படத்திலேயும் வியாபாரம் பண்ணுங்க. பெரிய ஹீரோ நடித்த படத்தை வாங்கி விநியோகம் செய்து அதில் நஷ்டப்படும் பணத்தை விட இதில் நிச்சயமாக பெரிய அளவுக்கான நஷ்டம் வரவே வராது.

இவர்களை மாதிரியான சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு கொடுத்து இந்தத் தொழிலுக்கும், திரைப்படத் துறையினர் உதவிகளை செய்ய வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.