777சார்லி- விமர்சனம்
வழிய வழிய அன்பைச் சொல்லியிருக்கும் ஒரு படம்
படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டி வாழ்வை ஏனோதானோ என வாழ்ந்து வருகிறார். அதற்கான காரணம் ஒரு விபத்தில் அவர் தன் குடும்பத்தை இழந்து விடுகிறார். அந்தத் துயரமே அவரை வாழ்வின் மீதான பிடிப்பு இல்லாமல் செய்துவிடுகிறது. அவரின் துயர் துடைக்கும் மீட்பராக சார்லி என்ற நாய் அவரிடம் வருகிறது. முதலில் நாய்மீது வெறுப்பை உமிழும் ரக்ஷித் ஷெட்டி பின் சார்லியை அன்பால் அணைக்கிறார். அதன்பின் சார்லிக்கு ஒரு பிரச்சனையும் கனவும் இருப்பது ரக்ஷித் ஷெட்டிக்கு தெரிய வருகிறது. இரண்டையும் ரக்ஷித் ஷெட்டி சரி செய்தாரா என்பதே படத்தின் கதை
படத்தை ஒட்டுமொத்தமாக தன் கால்களில் வைத்து துள்ளல் போட்டுக் கொண்டு போகிறது சார்லி. நாய்தானே…வழக்கமா எல்லா படங்களிலும் செய்தது போல செய்யும் என்று நினைத்தால் இந்தச் சார்லி நடிப்பில் பேராச்சிரியம் காட்டுகிறது. மனிதர்களுக்குத் தான் தங்கள் உணர்வுகளுக்கு ஏற்ப முகபாவனை மாறும். சார்லியும் மனித முகபாவனைகளை கொண்டு வந்துள்ளது. படத்தின் பெரிய ப்ளஸ் சார்லியின் பெர்பாமன்ஸ். நாயகன் ரக்ஷித் ஷெட்டி கச்சிதமாக நடித்துள்ளார். பற்றற்றவராக வரும் போதும், சார்லியின் அன்பை பெற்றபின் தன் குணம் மாறி நிற்கும் போதும் நன்றாகவே நடித்துள்ளார். கெஸ்ட் ரோலில் வரும்,பாபி சிம்ஹா ஓகே ரகம். ஹீரோயின் கேரக்டரில் தான் பெரிய வெயிட்டேஜ் இல்லை
படத்தில் டெக்னிக்கல் டீம் நன்றாக வேலை செய்துள்ளது. குறிப்பாக கேமராமேன் அரவிந்த் காஷ்யப். ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஏற்ற லைட்டிங், ப்ரேமிங் என கலக்கியுள்ளார். இசை அமைப்பாளர் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இன்னும் வீரியத்தை விதைத்திருக்கலாம்.
எமோஷ்னலாகவும் என்கேஜ்டாகவும் பயணிக்கும் படத்தில் அடிக்கடி பாடல் வருவது சின்ன சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் நீளத்தையும் குறைத்திருக்கலாம். மற்றபடி பெரிய குறைகள் இல்லாத நல்லபடம் இந்தச் சார்லி
3.5/5