‘ஆலன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ எனும் இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, ‘அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.
‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குநர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நடிகர் வெற்றி பேசுகையில்,
” ஆலன் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் – தயாரிப்பாளர் சிவாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களை தான் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு காதல் படத்தில் நடிப்போம் என்று யோசித்து கொண்டிருக்கும்போது.. சிவா சார் இப்படத்தின் திரைக்கதையை என்னிடம் கொடுத்தார். படித்தவுடன் இரண்டு விசயங்கள் தான் எனக்குள் தோன்றியது. இந்தப் படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரிக்க முடியாது. பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க வேண்டும். அடுத்ததாக இசையமைப்பாளர் திறமையானவராக இருக்க வேண்டும் என நினைத்தேன். காதல் கதை என்பதால் இது முக்கியம் என தயாரிப்பாளிடம் சொன்னேன். அவரே இயக்குநர் என்பதால் அவருடைய கற்பனைக்காக செலவு செய்ய தயாராக இருந்தார். படத்தினை கஷ்டப்பட்டு தான் உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்த சக கலைஞர் அனைவரும் நன்றாக தங்களுடைய உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா சிறந்த இசையை வழங்கி இருக்கிறார். இது போன்ற புதிய முயற்சிகளுக்கு ஆதரவு அளியுங்கள்” என்றார்.