நிசப்தம் – விமர்சனம்

RATING : 3.5/5
அதி அற்புதங்கள் நிறைந்தது குழந்தைகளின் உலகம்.
அந்த அற்புத உலகத்துக்குள் சில காமுகர்கள் எண்ட்ரி போட்டு உள்ளே நுழைகிற போது பெண் குழந்தைகளிடம் காண்பிக்கிற பாலியல் அத்துமீறல்களும், அதனால் அந்தப் பெண் குழந்தைகள் மன ரீதியாகப் பாதிக்கப்படுவதையும் உணர்ச்சிப் பெருக்கோடு திரையில் கொண்டு வந்திருக்கும் படம் தான் இந்த ‘நிசப்தம்.’
காதலித்து திருமணம் செய்து கொள்கிற அஜய், அபிநயா ஜோடிக்கு எட்டு வயது மகள் தான் பேபி சாதன்யா.
மழை நாள் ஒன்றில் பள்ளிக்கு செல்லுகிற வழியில் நன்றாக குடித்த முகம் தெரியாத காமுகன் ஒருவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறாள்.
இதனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படும் சாதனா ஆண் என்கிற காரணத்தினாலேயே பெற்ற அப்பாவைப் பார்த்தாலே பயந்து பதுங்குகிறாள். மகளின் அந்த கொடுமையான நிலையிலிருந்து அவளை எப்படி அஜய்யும், அபிநயாவும் மருத்துவர்களின் உதவியுடன் மீட்டெடுக்கிறார்கள்? என்பதே கிளைமாக்ஸ்.
மிகப்பெரிய ஆராவாரங்களோடு ரிலீசாகிற சில மாஸ் ஹீரோக்களின் படங்கள் இரண்டே நாட்களில் தியேட்டரை விட்டுமல்ல, படம் பார்க்கிற நம் மனசை விட்டும் விலகி ஓடி விடும்.
ஆனால் ‘நிசப்தம்’ மாதிரியான படங்கள் டைட்டிலைப் போலவே, சத்தமே இல்லாமல் ரிலீசாகி ஒரு வாரம் வரை நம் மனசை உள்ளுக்குள் என்னவோ செய்து கொண்டிருக்கும்.
அப்படி ஒரு மனசை கனக்கச் செய்கிற திரைக்கதை, நேர்த்தியான காட்சியமைப்புகள் என என்னென்னவோ செய்கிறது இந்தப்படம்.
ஹீரோ அஜய் ஹீரோயின் அபிநயா இருவரை விடவும் நம் மனசில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்வது பேபி சாதன்யா தான். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுமிகளின் மனநிலையையும், உடல் மொழிகளையும் அப்படியே உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறார் அந்த சின்னஞ்சிறு மனுஷி!
ஹாஸ்பிட்டலில் ரத்தம் வழிய வழிய மகள் கிடப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அதைத் தாங்க முடியாமல் அபிநயா மயங்கிச் சரிவதும்,பெற்ற மகள் தன்னிடம் வரவே பயப்படுகிறாள் என்பதை அறிந்து நொறுங்கிப் போகிற காட்சிகளிலும் அஜய்யும் மிகச்சிறந்த பாராட்டும்படியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சில காட்சிகளில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாமோ? என்று சொல்ல வைக்கிறது இருவரும் ஏற்று நடித்த கேரக்டர்களின் கனம்.
போலீஸ் அதிகாரியாக வரும் கிஷோர், வழக்கறிஞராக வரும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், எக்ஸ்ட்ரா மேக்கப்புடன் மெடிக்கல் தெரப்பிஸ்டாக வரும் ரிது, பழனியின் மனைவியாக வரும் ஹம்சா, நீதிபதியாக வரும் ராமகிருஷ்ணா என படத்தில் நடித்திருக்கும் அத்தனை கேரக்டர்களும் படத்துக்கு கூடுதல் விறுவிறுப்பு.
ஜான் ஜாஸீலின் இசையில் போகிற போக்கில் வருகிற பாடல்களும், பின்னணி இசையும் ரம்மியம்.
எஸ்.ஜே ஸ்டாரின் ஒளிப்பதிவு பவுடர் போட்டு துடைத்து வைத்த கண்ணாடி போல போன்ற பளிச் பளிச்.
பாலியல் தொந்தரவு தருகிறவனைத் தவிர, படத்தில் வருகிற மற்ற எல்லா கேரக்டர்களும் நியாயத்தின் பக்கமும், சட்டத்தில் பக்கமுமாகவே இருப்பதாக வடிவமைக்கப்பட்டிருப்பது படம் பார்க்கிற ஈர்ப்பை இன்னும் அதிகப்படுத்துகிறது.
குற்றவாளி அடையாளம் காட்டப்பட்ட பிறகும் அவனுக்கு நீதிபதி 14 வருடம் சிறை தண்டனை கொடுப்பதும், அந்த தண்டனை பத்தாது அவனை தூக்குத் தண்டனை கொடுங்கள் என்று கோர்ட் உள்ளேயே அபிநயா கதறி அழுவதும், இந்த நாட்டில் சட்டத்தில் இருக்கிற ஓட்டை உடைசல்கள் குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எப்படியெல்லாம் சாதகமாக இருக்கிறது என்பதையும் பொட்டில் அடித்தாற் போல் சொல்லியிருக்கிறது அந்த கிளைமாக்ஸ் நீதிமன்றக் காட்சிகள்.
2014ம் ஆண்டு பெங்களூரில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை படமாக்கியிருக்கிறார்கள். படம் முடிந்து தியேட்டரை விட்டு நகர்கிற ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் ஒருவித கனத்தோடு வருவது நிச்சயம். அந்தளவுக்கு கனமான கதையை நேர்த்தியான காட்சியமைப்புகளை மிக எளிமையாகவும், அழகாகவும் நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார்கள்.
இதுபோன்ற குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை படமாக்கும் போது வன்புணர்வுக் காட்சியை எப்படி காட்சிப்படுத்த வேண்டுமென்கிற வரைமுறை இருக்கிறது. அந்த வரைமுறையை கொஞ்சமும் மீறாமல் எந்த இடத்திலும் முகம் சுளிக்க வைக்காமல் இந்த சமூகத்துக்கு தேவையான நேரத்தில் தேவையான ஒரு நிஜ சம்பவத்தை உள்ளது உள்ளபடியே படமாக்கித் தந்த விதத்தில் கவனம் பெறுகிறார் இயக்குநர் மைக்கேல் அருண்.
நிசப்தம் – இது படமல்ல… ஒட்டுமொத்த சமூகத்துக்கான பாடம்!