தொற்று நோய் பரவும் அபாயம்! : தெருவில் இறங்கிய பார்த்திபன்

Get real time updates directly on you device, subscribe now.

Parthipan1

சென்னையின் எல்லா இடங்களிலும் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து விட்டது. மக்கள் எல்லோரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டார்கள் என்று அரசு தரப்பில் வாய் கூசாமல் அறிக்கைகள் விடப்பட்டாலும் சென்னையின் உட்புறங்களில் இருக்கும் பெரும்பாலான இடங்களில் இன்னும் வெள்ளநீர் வடியவே இல்லை என்பதே மீடியாக்கள் மூலமாக வெளியே வரும் செய்திகள்…

அப்படி ஒரு தெரு தான் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வேம்புலி அம்மன் கோவில் தெரு. மழை பெய்த நாளில் இருந்தே மழை நீர் நான்கு நாட்களாக அகற்றப்படாததால் தூர்நாற்றம் வீச நேற்று அந்தப் பகுதியில் உள்ள கழிவு நீரில் பேண்ட்டை மடித்து விட்டு நிவாரணப்பணிகளில் இறங்கினார் நடிகர் பார்த்திபன்.

அங்கு சென்ற பார்த்திபன், நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க தெருவெங்கும் பிளீச்சிங் பவுடரைத் தூவினார். அதோடு ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் பாட்டில்களைக் கொடுத்தார்.

அந்தப் பகுதியில் பலரும் உணவு விநியோகம் செய்திருந்த நிலையில் மக்களின் அவசியத் தேவையான குடிநீருக்குப் பற்றாக்குறை இருந்திருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டே குடிநீர்பாட்டில்களை எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்து விட்டு வந்திருக்கிறார்.

அப்பகுதி காவல் ஆய்வாளர் உதவியுடன் சில இடங்களுக்குப் படகில் சென்றும் உதவியிருக்கிறார்.

தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுத்த பார்த்திபனை வாயார வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.