‘12.12.1950’ கமலை அவமதிக்கும் படமா? – இயக்குனர் கபாலி செல்வா விளக்கம்

ஜியோஸ்டார் நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிக்க கபாலி செல்வா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் ’12 12 1950.’

டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் இந்தப்படம் ரஜினியின் புகழ்பாடும் படமாக தயாராகியிருக்கிறது என்கிறது ஏற்கனவே படம் பற்றி வெளியான செய்திகள். என்னுடைய வாழ்வில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை தான் இந்தப்படம் என்று சொல்லும் இப்படத்தின் இயக்குனரும் நடிகருமான செல்வா தனது பெயரை கபாலி செல்வா என்று மாற்றிக்கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படம் பற்றி அவர் மேலும் கூறியதாவது… ”40 ஆண்டுகளாக நான் ரஜினி ரசிகனாக இருந்து வருகிறேன் என்பதை சொல்லிக் கொள்ள பெருமைப்படுகிறேன். என் அப்பாவிடம் கதையை சொன்னேன். அவர் நண்பர் கோட்டீஸ்வர ராஜு சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவரும் ரஜினி ரசிகர் என்பதால் கதையை கேட்டவுடன் ஓகே சொன்னார்.

முதன் முதலில் தம்பி ராமையாவிடம் கதையை சொன்னபோது அவர் கொடுத்த ஊக்கம், எனக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது. யாருமே சம்பளத்தை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் எனக்காக நடித்துக் கொடுத்தனர். எம்எஸ் பாஸ்கர் அவர் வாங்கும் சம்பளத்தில் பாதி போதும் என சொல்லி எனக்காக நடித்துக் கொடுத்தார். அஸ்வினியிடம் அடுத்த படத்தில் உங்களுக்கு பெரிய ரோல் தரேன், என சொல்லி ஏமாற்றி தான் இந்த படத்தில் நடிக்க வைத்தேன். இந்த படத்தில் என் மகனும் ஒரு ரோலில் நடித்திருக்கிறான். நான் சொன்ன பட்ஜெட்டில் 20 சதவீதம் மிச்சப்படுத்தியது எனக்கு திருப்தியாக இருக்கிறது. இப்போது பலரும் தயாரிப்பாளரை போட்டு வதைக்கிறார்கள். திட்டமிட்டு படத்தை எடுத்தால் சினிமா துறை நன்றாக இருக்கும்.

தம்பி ராமையா 9 விதமான கெட்டப்பில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கமல் சாரை எந்த வகையிலும் அவமதிக்கவில்லை. பரோலில் வெளியே வந்து படம் பார்க்கும் ரசிகரை பற்றிய கதை தான். ரஜினி சார் யாரையும் புண்படுத்த மாட்டார். நானும் அதை விரும்ப மாட்டேன். ரஜினி சார் பிஸியாக இருந்ததால் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. நேரம் கிடைத்தால் அவருக்கு படத்தை திரையிட்டு காட்ட விரும்புகிறேன். தொழில்நுட்ப கலைஞர்களின் குடும்பத்துக்கு திரையிடப்பட்ட சிறப்பு காட்சியில், பல பெண்கள் படத்தை விரும்பி பார்த்தார்கள்.

நான் கூட ரசிகர்களை சந்திக்க பல நேரங்களில் சலித்துக் கொள்வேன். ஆனால் ரஜினி சார் எல்லா ரசிகர்களையும் மதித்து, பழகக் கூடியவர். ரஜினி சாரை முதன் முதலாக பார்த்தபோது எனக்கு பேச்சே வரவில்லை. அவர் என்னை அழைத்து கட்டி பிடித்து வாழ்த்தினார். பாட்ஷா படத்தில் தம்பி கதாபாத்திரத்துக்கு நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. பின் அது நடக்கவில்லை. அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். ரஜினி ரசிகர்களுக்காக மட்டும் இந்த படம் எடுக்கவில்லை. எல்லோரையும் கவரும் படமாக இருக்கும்” என்றார் கபாலி செல்வா.

12.12.1950 Movie12.12.1950 Trailer Launch12.12.1950 Trailer Launch NewsKabali SelvaKamal HaasanRajinikanthSelva
Comments (0)
Add Comment