”நீங்க ஜெயிக்கிற வரை உங்க கூடவே இருப்பேன்…” – புதுமுக இயக்குநரை நெகிழ வைத்த நயன்தாரா!

.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ பட ரிலீசுக்குப் பிறகு அது சம்பந்தமான நடந்த கதைப் பஞ்சாயத்து இந்த உலகம் அறிந்த ஒன்று தான்.

”அந்தப் படத்தின் கதை என்னுடையது, அதை ஏ.ஆர்.முருகதாஸ் திருடி படமாக்கி விட்டார்” என்று வெளிப்படையாகவே குற்றம் சுமத்தினார் மீஞ்சூர் கோபி.

திரையுலகை பரபரப்பாக்கிய இந்தப் பஞ்சாயத்தில் மீஞ்சூர் கோபி தரப்பில் நியாயம் இருப்பதை ஊடகங்கள் மட்டுமே வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

அந்த வெளிச்சம் தான் இன்றைக்கு நான் நயன்தாரா மேடத்தை வைத்து இந்த ‘அறம்’ படம் இயக்க முக்கிய காரணமாக அமைந்தது. அந்த வகையில் நான் முதலில் ஒட்டுமொத்த ஊடகங்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்றபடியே பேச ஆரம்பித்தார் கோபி நயினார் ஆக இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் மீஞ்சூர் கோபி.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ்  தயாரிக்க, கதையின் நாயகியாக நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இதற்கு முன்பும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள மாயா, டோரா போன்ற சில படங்களில் நயன் தாரா நடித்திருந்தாலும் இந்தப்படத்தில் அவர் நடிக்க முக்கியக் காரணம் இந்தப்படம் மக்களின் தண்ணீர்ப் பிரச்சனையை சமூகப் பார்வையோடு பேசுவது தான் முக்கிய காரணம்.

தொடர்ந்து கோபி நயனார் பேசும்போது… ”இந்த படத்துக்கு முன்பு, எனக்கு நிகழ்ந்த துயரத்தின் போது ( கத்தி படப்பிரச்சனை ) எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது பத்திரிக்கையாளர்கள் தான். ஊடகங்கள் எழுதிய போது என் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து தான் இண்டஸ்ட்ரியில் இந்த மிகப்பெரிய வாய்ப்பே எனக்கு கிடைத்தது. இயக்குனர் சற்குணம் தான் தயாரிப்பாளர் ராஜேஷை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அதன் பின் நயன்தாராவுக்கு கதை சொல்ல வைத்தார்கள், சில மணி நேரங்களிலேயே எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார்கள். இதெல்லாம் நிஜமா? என்கிற சந்தேகம் எனக்குள் எழுந்தது. ஏனென்றால் இதே கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொன்ன போது இது ஒரு ஆவணப்படம் போல இருக்கிறது. கமர்ஷியல் விஷயங்கள் எதுவும் இல்லை என்று தவிர்த்தார்கள்.ஆனால் நயன் தாரா மேடத்திடம் கதையைச் சொன்ன 5 நிமிடங்களுக்குள் இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன் என்று சொல்லி விட்டார். இது எல்லாமே ஒரு கனவு போல வேகமாக நடந்தது.

கதை ஓகே ஆனபிறகு கூட இந்த படத்தை தடுக்க நிறைய பேர் முயற்சி செய்தார்கள். ஆனாலும் நயன்தாரா மேடம் உறுதியாக இருந்து இந்த படத்தை முடிக்க துணை நின்றார். இந்த படத்தில் என்னை போலவே எல்லோருக்கும் சமூக அக்கறை இருந்தது, அதனால் தான் எல்லோரும் இந்த படத்துக்குள் வந்தார்கள். முதலில் பாடல்கள் வேண்டாம் என்று தான் முடிவெடுத்திருந்தோம். பின்னர் படத்தை முடித்த பிறகு இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு போட்டுக் காட்டி, உமாதேவியின் வரிகளில் பாடல்களை சேர்த்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் பேசிய நயன்தாரா, நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும். அதோடு நீங்கள் நின்று விடக்கூடாது. உங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும். அதுவரை நான் உங்களுடன் இருப்பேன் என்றார். இது யாருக்குமே கிடைக்காத பாக்கியம் என்று நிமிடத்துக்கு நிமிடம் நயன்தாராவைப் பற்றி நெகிழ்ந்தவர் எங்களை போன்ற கலைஞர்களை பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் அடக்கு முறையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ArammAramm Press MeetGopi NainarNayanthara
Comments (0)
Add Comment