வெள்ளிக்கிழமையானால் இந்த சீஸன் எப்பத்தான் முடியுமோ? என்று கடுப்பாகிற அளவுக்கு வந்து மிரட்டுகின்றன பேய்ப்படங்கள். ஆனால் இந்த ‘பேபி’யை அந்த ‘கடுப்பு’ லிஸ்ட்டில் சேர்த்து விடமுடியாது.
பிரிந்த இளம் தம்பதிகளான மனோஜ், ஷிரா இருவரும் ( மனோஜிடம் சாதன்யா, ஷிராவிடம் ஸ்ரீவர்ஷினி ) இரண்டு பெண் குழந்தைகளோடு ஆளுக்கொரு வீட்டில் தனியாக வசிக்கிறார்கள்.
இதில் ஷிராவிடம் இருக்கும் ஸ்ரீவர்ஷினி எப்போது பார்த்தாலும் ஒரு பொம்மையை கையில் வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறாள். கண்ணாடியைப் பார்த்து சிரிக்கிறாள். அபார்ட்மெண்ட்டில் இருக்கும் லிப்ட் பக்கம் அடிக்கடி போய் யாருடனோ பேசுகிறாள். அவளை எப்போதும் ஒரு முகம் தெரியாத அன்பாக அழைக்க அந்த குரல் வந்த திசையை நோக்கிப் போகிறாள்.
அவளது அந்த விநோதமான நடவடிக்கைகளை பார்க்கும் ஷிராவுக்கு அது தன் குழந்தையே இல்லை என்கிற விபரம் தெரிய வரும்போது அதிர்ந்து போகிறாள்.
கணவன் மனோஜிடம் என் குழந்தையை எங்கே என்று கேட்கும் போது ப்ளாஸ்பேக் விரிகிறது. அந்த நெகிழ்ச்சியான பிளாஸ்பேக்கில் சாதன்யா தான் தன் மகள் என்றும் ஸ்ரீவர்ஷினி வளர்ப்புக் குழந்தை என்கிற உண்மையும் தெரிய வருகிறது.
பிறகு கணவன் – மனைவி இருவரும் ஒரே வீட்டில் இணக்கமாகி வசிக்க அங்கு புதிதாக இன்னொரு பெண் குழந்தை வந்ததும் தன் குழந்தைக்கான பாசம் குறைந்து விடுமோ என்று நினைக்கும் இறந்து போன வளர்ப்புத் தாயின் அம்மா ஆவியாக வந்து சாதன்யாவை டார்ச்சர் செய்கிறார்.
அதனால் ஏற்படுகிற விளைவுகள் தான் கிளைமாக்ஸ்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனோஜின் நடிப்பை திரையில் பார்க்க முடிகிறது. பெற்ற குழந்தையா? வளர்த்த குழந்தையா? என்கிற முடிவெடுக்கும் போராட்டத்தில் ஒரு அப்பாவா அவர் படும்பாடு ஆழமான அவஸ்தை.
தன் குழந்தையின் நலனுக்காக வளர்ப்புக் குழந்தையை மனோஜ் அனாதை ஆசிரமத்தில் சேர்க்க முயற்சிக்கும் போது, இரண்டு குழந்தைகளுமே என்னோட குழந்தைகள் தான் என்று அவரிடம் சண்டை போட்டு விட்டு விலகும் போது ஒரு தாயின் பாசத்தை உணர வைக்கிறார் அவரது மனைவியாக வரும் ஷிரா.
சாதன்யா, ஸ்ரீவர்ஷினி என இரண்டு க்யூட் குழந்தைகளின் சின்னச் சின்ன சேட்டைகள், ஈகோ, பொறாமை, பாசத்துக்காக ஏங்குவது, அவர்களின் தவிப்பு என நடிப்பில் கதகளி ஆடியிருக்கிறார்கள்.
பேயாக வரும் அஞ்சலி ராவ் மீரா சீயக்காய் தூள் விளம்பரத்துக்கு வருவது போல நீளமான முடியுடனும், அதற்கு நடுவே முட்டைக் கண்ணை காட்டியபடியும் மிரட்டுகிறார். அதைத் தாண்டி அவருக்கு படத்தில் எங்கும் வேலை இல்லை.
முழுப்படத்தையும் ஒரு அபார்ட்மெண்ட்டுக்குள்ளேயே பல ஆங்கிள்களில் கேமராவை சுழல விட்டு காட்சிகள் போரடிக்காமல் மிரட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் ஆனந்த். அவரது ஒளிப்பதிவுக்கு ஏற்ற பின்னணி இசையை கனகச்சிதமாகக் கொடுத்த இசையமைப்பாளர் சதீஷ்ஹாரிஷ் பாராட்டுக்கள்.
படத்தின் நீளம் குறைவாக இருந்தாலும் சில காட்சிகள் நீளமாக நகர்வதை கத்தரி போட்டிருக்கலாம் எடிட்டர் பகத் சிங்.
ஆவி, பேய், பிசாசுப் படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்கிற வழக்கமான நடைமுறைகளை புறந்தள்ளி விட்டு இரண்டு சிறுமிகளின் ஈகோ, ஏக்கம், தவிப்புகளை அச்சு பிசகாமல் காட்சிப்படுத்தி நெகிழ வைக்கிறார் அறிமுக இயக்குநர் டி. சுரேஷ்