நட்சத்திரங்கள் – நகுல், ஆஷ்னா ஜாவேரி, நீது சந்திரா, ராஜேந்திரன், பாக்யராஜ், சித்தார்த் விபின் மற்றும் பலர்
இசை – சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு – தீபக் குமார் பதி
இயக்கம் – பி.எஸ் விஜயகுமார்
வகை – ஆக்ஷன், நாடகம்
சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’
கால அளவு – 2 மணி நேரம் 11 நிமிடங்கள்
யார் யாருக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை என்பதை பிறக்கும் போதே தீர்மானித்து விடுபவர் படைக்கும் கடவுளான பிரம்மா. அப்படி அவர் மூலமாக கிடைத்த மனித வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து விட வேண்டும், அதை விட்டு விட்டு தன்னை விட வசதியானவர்களைப் பார்த்து பகட்டு வாழ்க்கை வாழ முயற்சித்தால் என்ன நடக்கும்? என்பதே ஃபேண்டஸி டைப்பாக வந்திருக்கும் இந்த ‘பிரம்மா டாட் காம்’.
விளம்பரக் கம்பெனி ஒன்றில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருப்பவர் ஹீரோ நகுல். அதே நிறுவனத்தில் அவரை விட உயர் பதவியான சி.இ.ஓ ஆக பணியாற்றுபவர் அவரது நெருங்கிய உறவினர் சித்தார்த் விபின்.
விளம்பர மாடலான ஹீரோயின் ஆஸ்னா சாவேரியை காதலிக்கும் நகுல் அவரது லெவலுக்கு தன்னுடைய ஸ்டேட்டஸும், தன்னுடைய வேலையும், அதில் கிடைக்கும் குறைந்த வருமானமும் இல்லையே என்று கவலைப்படுகிறார்.
ஒருநாள் தனது பிறந்தநாளில் அம்மா சொன்னதன் பேரில் கோவிலுக்குச் செல்கிறார் நகுல். அங்கு பிரம்மாவிடம் சித்தார்த் விபினின் வாழ்க்கையை தனக்குக் கொடுக்கும் படியும், தன்னுடைய வாழ்க்கையை அவருக்கு கொடுக்கும் படியும் சண்டைப் போட்டு கேட்கிறார். பிரம்மாவும் நகுலின் வேண்டுகோளை ஏற்று அவ்வாறே வரத்தைக் கொடுக்கிறார்.
அதன்படியே சி.ஈ.ஓவாக மாறுகிறார் நகுல்! அதுவரை நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தபோது நகுலைக் காதலித்த ஆஸ்னா சாவேரி, பிரம்மாவின் கொடுத்த வரத்தால் அதே வேலைக்கு மாறும் சித்தார்த் விபினைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். நகுலை வெறுக்க ஆரம்பிக்கிறார்.
இதனால் சோகத்தில் இருக்கும் நகுலை இன்னொரு பக்கம் அந்த சி.ஈ.ஓ பதவியில் இருப்பவர் தன் குண்டான, வெகுளி மகளை திருமணம் செய்யும்படி ஏற்கனவே அக்ரீமெண்ட் போட்டிருப்பதும் தெரிய வர.. இந்த சிக்கல்களை எல்லாம் நகுல் எப்படி சமாளிக்கிறார்? தான் காதலி ஆஸ்னா சாவேரியை கரம் பிடித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்த வகையில் நகுலைப் பாராட்டலாம். அதே சமயம் நடிப்பு என்று பார்த்தால் முந்தைய படங்களிலிருந்து எந்த வித்தியாசமும் இல்லை. பிரம்மாவிடம் சீரியஸாக சண்டை போடும் போது கூட சிரிப்பது போலவே தெரிகிறது. ப்ளீஸ் கொஞ்சமாச்சும் சேஞ்ச் பண்ணுங்க பாஸ்…
நகுலை கம்பேர் செய்கிற போது காமெடி கம் கேரக்டரில் ஆர்ட்டிஸ்ட்டாக வரும் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிப்பில் எக்ஸ்ட்ராவாக ஸ்கோர் செய்கிறார். பின்னணி இசையும், பாடல்களும் ஓ.கே ப்ரோ!
ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் கவர்ச்சி நடிகை மாதிரி ஃபுல் மேக்கப்பில் வருகிறார் ஆஸ்னா சாவேரி. ( எதுக்கும்மா உதட்டுல அவ்ளோ லிப்ஸ்டிக்?!!!) அதிர்ந்து நடிக்கத் தேவையில்லாத வழக்கமான ஹுரோயின் கேரக்டர். அதற்கு என்ன தேவையோ அதை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
கரகரக் குரலும், கெத்தான பாடி லாங்குவேஜுமாக வரும் மொட்டை ராஜேந்திரனை முன்பெல்லாம் திரையில் பார்த்தவுடன் சிரிப்பு வரும், இப்போது அப்படியில்லை, அவரது குரலைக் எரிச்சல் தான் வருகிறது. குரலை மாற்ற முடியாது, நடிப்பை மாற்றலாமே..?
ஹீரோயினாகவே ஒரு ரவுண்டு வந்திருக்க வேண்டிய நீது சந்திராவுக்கு இதில் சின்னதான ஒரு நடிகை கேரக்டர். அவரைப் போலவே கோவில் பூசாரியாக வரும் கே.பாக்யராஜ், நகுல் அம்மாவாக வரும் கெளசல்யா, ப்ரெண்ட்டாக வரும் நண்டு ஜெகன் என படத்தில் தெரிந்த முகங்களும் உண்டு.
டிஜிட்டல் யுகத்தில் இப்படி ஒரு பகட்டான வாழ்க்கையை நாமும் வாழ மாட்டோமா? என்று தன்னை விட வசதியானவர்களைப் பார்த்து ஏங்கும் அத்தனை பேரையும் யோசிக்க வைத்ததோடு கிடைத்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழக்கற்றுக் கொள்ளுங்களேன் என்று அட்வைஸும் செய்திருக்கிறார் இயக்குனர் பி.எஸ் விஜயகுமார்.
திரைக்கதையில் குழப்பமில்லாமல் இன்னும் கொஞ்சம் தெளிவையும், ஃபேண்டஸி டைப் காட்சிகளில் கூடுதல் சுவாரஷ்யங்களையும் சேர்த்திருந்தால் அவருக்கு மெகா ஹிட் என்ற சாத்தியமாகும் வரம் ரசிகர்களிடமிருந்து கிடைத்திருக்கும்!