இரும்பிலே ஓர் இதயம் என்பது போல் ஸ்டண்ட் இயக்குநரிடம் இருந்து ஒரு மென்கவிதை போன்ற ஓர் பாசப்படம். சித்திரைச் செவ்வானம் என டைட்டிலிலே ஓர் அட்ராக்ஷன் இருந்தது
பொள்ளாச்சியில் ஓர் கிராமத்தில் விவசாயம் பார்க்கும் சமுத்திரக்கனிக்கு தன் மகள் பூஜா கண்ணனை மருத்துவராக்க ஆசை. பள்ளித்தேர்வில் முதன்மை மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் பூஜா கண்ணன் நீட் தேர்வுக்காக விடுதியில் தங்கிப்படிக்கிறார். அங்கு விதி அவர் வாழ்வில் சில பணக்கார பையன்கள் எடுக்கும் ஒரு வீடியோ மூலமாக விளையாடுகிறது. அந்தப்பிரச்சனையால் பூஜா கண்ணன் எடுக்கும் முடிவு என்ன? அப்பா சமுத்திரக்கனி அந்தப்பிரச்சனைகளை எப்படி சரி செய்கிறார் என்பதே படத்தின் கதை
படத்தின் ஆரம்ப காட்சிகளில் சிறியதாக தடுமாறினாலும் சமுத்திரக்கனி போகப்போக நடிப்பில் நம்மை ஒன்ற வைத்துவிடுகிறார். பூஜா கண்ணன் நல் வரவு. ஒரு முக்கியமான எமோஷ்னல் காட்சியில் இருவருமே நடிப்பில் அசத்திவிடுகிறார்கள். பணக்கார பண்ணையார்களின் மகன்களாக வரும் இளைஞர்கள் அனைவருமே நல்ல தேர்வு
படத்தின் ஒளிப்பதிவில் நல்ல நேர்த்தி. பொள்ளாச்சி அழகில் எல்லாமே சிறப்பு. பின்னணி இசையில் பெரிய ஏமாற்றமில்லை. மேலும் சாம் சி எஸ் எந்தப்படங்களில் ஹீரோக்களுக்கு மாஸ் மியூசிக் கொடுக்க வேண்டும் என்பதை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மென் உணர்வுகளை கடத்தும் படத்திற்கு கூட சமுத்திரக்கனியின் சில செய்கைகளுக்கு ர்ர்ரா ர்ர்ரா என ஓவர் மியூசிக்..விக்ரம் வேதாவில் சீக்கிரம் வெளில வாங்க தல!
ஆரம்பத்தில் மகளுக்கு ஒரு பிரச்சனை என படத்தை துவங்கி, அதன்பின் மகள் தந்தைக்கான பாசக்கதையை ரிவில் செய்து, பின் இடைவேளையில் ஒரு தரமான ட்விஸ்ட் என திரைக்கதை வடிவமைப்பில் மாஸ்டர் மாஸ் காட்டுகிறார். நடிகர்களிடம் இருந்து செட்டில் ஆன நடிப்பை வாங்கிய வகையிலும் மாஸ்டருக்கு பாஸ் மார்க். படத்தின் முடிவு தான் பலத்த அதிர்ச்சி! கிராமப்பின்னணி கொண்டவர்கள் எல்லாம் இப்படித்தான் முடிவினை எடுப்பார்கள் என்ற பிற்போக்குத்தனத்தை இன்னும் எவ்வளவு நாட்கள் தான் சொல்லிக்கொண்டிருப்பார்களோ? எளியவர்கள் பற்றிப்படம் எடுக்கும் போது படம் பார்ப்பவர்களுக்கு ஓர் நம்பிக்கையை விதைக்க வேண்டாமா? நல்ல படத்தில் இந்த ஒருகுறை தான் அது பெருங்குறையாக இருக்கிறது!
3/5