எதையும் மூடி மறைக்கக் கூடாது, எல்லாமே வெளிப்படையாக இருக்க வேண்டும் அப்போது தான் இந்த சமூகம் முன்னேறும் இப்படியெல்லாம் பேசுவதும், அதன்படி நடப்பதும் தான் பகுத்தறிவு என்று பேசுபவர் இயக்குநர் வேலு பிரபாகரன்.
‘நாளைய மனிதன்’ படம் உட்பட சுமார் ஒரு டஜன் படங்களை இயக்கியிருக்கும் இவர் ‘காதல் கதை’ என்ற படத்தை எடுத்த போது பெரும் சர்ச்சை கிளம்பியது. அப்படத்தில் கதாநாயகி ஷெர்லி தாஸ் அரை நிர்வாணத்தில் நடித்ததால் சென்சாரில் பிரச்சனையாகி பட ரிலீஸில் பெரும் சிக்கலைச் சந்தித்தது.
இருந்தாலும் கிளுகிளுப்பாக படம் எடுப்பதை கை விடாத வேலுபிரபாகரன் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் வரவு ”ஒரு இயக்குநரின் காதல் டைரி”யும் அதே ‘ஏ’ கிளாஸ் ரகம் தான்.
இப்படி சமீபகாலமாக கிளுகிளுப்பாக பரபரப்பைக் கிளப்பும் அவர் இன்றும் ஒரு பரபரப்பைப் கிளப்பினார்.
ஆமாம், இன்று காலை (3 ஜூன்) ம் தேதி தனது இயக்கத்தில் ‘காதல் கதை’ படத்தில் நடித்த நடிகை ஷெர்லி தாஸை பத்திரிகையாளர்கள் முன்னிலையில், சென்னையிலுள்ள லீ மேஜிக் லேண்டர்ன் ப்ரிவீயூவ் தியேட்டரில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்.
வேலு பிரபாகரனை திருமணம் செய்ய சம்மதம் சொன்ன நடிகை ஷெர்லி தாஸ் அவரை விட 25 வயது மூத்தவர்.
இதனால் இந்தத் திருமணத்துக்கு உங்களுக்கு முழு சம்மதமா என்று கேட்டார்கள் நிருபர்கள் அதற்கு பதிலளித்த ஷெர்லி தாஸ் “நான் திருமணம் செய்து கொள்வேன் என்று நினைக்கவே இல்லை. காதல் கதை படத்தில் நடித்த பிறகு சினிமாவில் நடிப்பதை விரும்பமால் ஐந்து வருடங்கள் வெளிநாட்டில் இருந்தேன். சென்ற ஆண்டு தான் இந்தியா வந்தேன். இவரை சந்தித்து பேசினேன். அவரிடம் இருக்கிற வெளிப்படைத் தன்மை தான் எனக்கு ரொம்ப பிடித்தது. அதனால் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டேன்” என்றார்.
மேலும் மூத்த நிருபர் ஒருவர் ”நீங்கள் செய்வது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா? இந்தப் பொண்ணுக்கு சட்டப் பாதுகாப்பு என்ன? யார் கொடுப்பது?” என்று வேலு பிரபாகரனிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அவர் ” ஷெர்லி தாஸை நான் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ளப் போகிறேன்” என்றார். உங்களுக்கு 60 வயதாகி விட்டது; இந்த வயதில் இப்படிச் செய்வது சரிதானா? என்று அடுத்த கேள்வியை எழும்பியதும் “அதைப்பற்றி நாம் வெளியில் தனியாகப் பேசிக் கொள்வோம்” என்று சொன்னவர் அடுத்தடுத்து கேள்விகள் எழ ஆரம்பிக்கவும் விட்டால் போதும்டா சாமியென்று ஷெர்லியை கூட்டிக்கொண்டு வேகமாக வெளியேறி விட்டார்.