எத்தனை விருதுகள் தேடி வந்தாலும் ஒரு குறிப்பிட்ட விருது தான் பெருமைக்குரிய விருதாக அமையும். அந்த வகையில் இயக்குநர் யுரேகாவுக்கு இந்த விருதைப் பெறும் முதல் தமிழர் என்கிற பெருமையோடு நைட் ஆப் கிரேஸ் செவாலியேர் விருது கிடைத்திருக்கிறது.
மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் யுரேகாவின் இயற்பெயர் ஜோசப் மோகன்குமார். 32 வருடங்களாக இலக்கிய மற்றும் ஊடகப்பணிகளை செய்து வருகிறார்.
1995-ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற 8-வது உலகத்தமிழ் மாநாட்டில் புதுக் கவிதைக்கான தமிழக அரசின் முதற்பரிசை பெற்றுள்ளார். இவரது கவிதைகள் மற்றும் பிற நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, இந்தியா, மற்றும் பல்வேறு உலக நாடுகளில் உள்ள இறையியல் பல்கலைகழகங்கள், மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு இறையியல் கல்லூரிகள் இவரைப் பாராட்டி கௌரவ பேராசிரியராக நியமித்துள்ளன. தற்போது, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு நவீன கோட்பாடுகளுடன் எழுதி, அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அவரின் இந்த பணிக்காக ஆர்தடாக்ஸ் தலைமை திருச்சபையைச் சார்ந்த ‘நைட் ஆப் மால்டா ஜெருசலேம்’ என்ற கிறஸ்துவ அமைப்பு கடந்த 13-ம் தேதி, ‘நைட் ஆப் கிரேஸ் செவாலியேர்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது.
பிரான்ஸ் நாடு வழங்கும் விருதும், நைட் ஆப் மால்டா ஜெருசலேம் வழங்கும் விருதும் ஒன்றல்ல, இரண்டுமே வேறு வேறு. இந்த அமைப்பின் செவாலியேர் விருதைப் பெறும் முதல் தமிழர் மற்றும் பத்திரிகையாளர் யுரேகா தான் என்பது தான் பெருமைக்குரிய தகவலாகும்.
பிரான்ஸ் நாடு வழங்கும் செவாலியே விருதுக்கு முன்பாகவே கி.பி-1048 -லிருந்து சுமார் 960 வருடங்களுக்கும் மேலாக ‘நைட் ஆப் மால்டா ஜெருசலேம்’ இந்த செவாலியேர் விருதை வழங்கி வருகிறது.
இந்தியாவில் முதல் முறையாக இந்த விருதைப் பெறுகின்ற இயக்குநர் யுரேகா தனது இலக்கிய பணிக்காக 6 பல்வேறு பல்கலைக் கழகங்களில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
இப்படி இலக்கியம், நூல்கள் என ஒரு பக்கம் தனது ஆளுமையைச் செலுத்தி வரும் யுரேகா திரைத்துறையின் தனது அடுத்த படத்துக்கான வேலையிலும் முழு மூச்சாக இறங்க்யிருக்கிறார்.