பெரும் கனவுகளோடு உலாவும் அப்பாவி பெண்களை தன் அதிகார லாபத்திற்காகவும் இச்சைக்காகவும் பயன்படுத்தும் கயவனை ஹீரோ எப்படி வதம் செய்கிறார் என்பதே எதற்கும் துணிந்தவன்
ஆக்ரோசம், பாசம், கோபம், காதல், காமெடி என ஆல் ஏரியாவிலும் ரவுண்ட் கட்டி ஆடியிருக்கிறார் சூர்யா. இப்படியான சூர்யாவைப் பார்த்து ரொம்பநாள் ஆச்சு! பிரியங்கா மோகனும் நாம் ப்ரியப்படும் கேரக்டரில் நடித்திருக்கிறார். சத்யராஜுக்கு சொல்லிக்கொள்ளும் அளவில் பெரிதாக ஒன்றுமில்லை. சரண்யா பொன்வண்ணன், சாய்தீனா, இளவரசு ஆகியோர் கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை. வில்லத்தனம் காட்டும் வினய் மிரட்டியிருக்கிறார்
இமானின் இசையில் பெரிய சோர்வும் இல்லை..பாடல்கள் பெரிதாக சோபிக்கவும் இல்லை. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு காட்சிக்கு காட்சி கம்பீரம் கூட்டுகிறது..
கதைக்களத்தில் நிறைய கமர்சியல் ஆடுகள் பலியிடப்பட்டாலும் கன்டென்ட் விசயத்தில் பாயும்புலியாக இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்…பெரும் ஆக்ஷன் சீக்வென்ஸில் துவங்கும் படத்தை சற்று நேரத்தில் பெரும் கமர்சியல் படமாக கொண்டு போய், முடிவில் மெகா ஆக்ஷன் சீக்வென்ஸோடு மேட்ச் செய்திருக்கிறார் இயக்குநர்.. பின்பாதியில் படம் நெடுக நிறைய க்ளிஷே வசனங்கள் க்ளிஷே பாடல்கள், க்ளிஷே காட்சிகள் கொட்டிக்கிடக்கிறது. ஆனாலும் படத்தில் ஹீரோ கேரக்டர் மூலமாக பாலியல் பிரச்சனைகளால் அவதிப்படும் பெண்கள் தங்கள் மனவலிக்கான நிவாரணத்தை எப்படி பெறவேண்டும் என்பதைச் சொன்ன விதத்தில் ஒரு satisfied படமாகிறது எதற்கும் துணிந்தவன்
3/5