இந்தப் பேய், படத்தில் பயம் காட்டுகிறதா.. இல்லை வெறும் படம் மட்டுமே காட்டுகிறதா?
யாருமே குடிவராத ஒரு வீட்டிற்கு நாயகன் அஜய் கார்த்தி குடிவருகிறார். அது ஏன் யாருமே குடிவராத வீடு என்றால், அந்த வீட்டில் ஒரு இளைஞன் தன் இரு நண்பர்களை கொன்றிருக்கிறான். கூடவெ அவனும் இறந்திருக்கிறான். அதனாலே அங்கு யாரும் குடிவரவில்லை. சரி குடிவந்த ஹீரோவுக்கு பிரச்சனை வரவேண்டும் தானே? யெஸ் நாம் நினைப்பது போலவே பெரும் பிரச்சனைகள் வருகிறது. அவற்றை அவர் சமாளித்தாரா.. இந்த மர்மத்தை விசாரிக்க வரும் காவல் அதிகாரி நட்டி என்ன மாதிரியான அனுபவங்களைப் பெற்றார்? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை
நாயகன் அஜய் கார்த்தி ஓரளவு ஹீரோவாக ஸ்கோர் செய்கிறார். ஆனால் நட்டி ஏனோதானோ என்றே நடித்துள்ளார். உடலளவிலும் அவர் எந்த அர்ப்பணிப்பையும் படத்திற்கு வழங்கவில்லை. பிற நடிகர்களான விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், அஞ்சனா நெதுருன், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் ஒகே ரகம். சமீபத்தில் மறைந்த பாக்யராஜை திரையில் பார்க்கையில் இதயம் கனத்தது
மனு ரமேசன் பின்னணி இசையில் நல்ல கவனம் செலுத்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் ரவி சக்தி குறுகிய இடத்திற்குள் நடக்கும் கதையில் தன்னால் ஆன நல்ல ஷாட்களை கொடுத்துள்ளார்
இயக்குநர் கல்யாண் கே ஜெகன் மேக்கிங்கில் சற்று தேறினாலும் திரைக்கதையில் கோட்டைவிட்டுள்ளார். பிரச்சனையுள்ள வீட்டுக்கு குடிவரும் நாயகன், வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்களைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் அவரே சமாளிப்பதில் என்ன லாஜிக்? அவருக்கு இது சொந்த வீடு என்றாலும் பரவாயில்லை. இப்படி படம் நெடுக நம்மை பயமுறுத்தாமல் யோசிக்க வைப்பதிலே குறியாக இருக்கிறார் இயக்குநர். படம் ஓகோ ரகம் இல்லை. ஏன் ஒகே கூட இல்லை
2.25/5