பிக்பாஸ் பிரபலங்களான நடிகர் தர்ஷனும், நடிகை லொஸ்லியாவும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டிருக்கிறார். பிரபல வெற்றிப்பட இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் சொந்த பட நிறுவனமான ஆர்.கே. செல்லுலாயிட்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம்‘தெனாலி’, மாபெரும் வெற்றியைப் பெற்றது. இருபது ஆண்டுகளுக்கு பிறகு, இந்நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இப்படத்தில் கே. எஸ் ரவிக்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, அவருடன் பிக்பாஸ்’ பிரபலங்களான தர்ஷன், லொஸ்லியா மற்றும் யோகி பாபு, பூவையர், மனோபாலா, மாரிமுத்து, ‘பிளாக்’ பாண்டி, ‘பிராங்க் ஸ்டார்’ ராகுல், நடிகை பவித்ரா லோகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர்களாக சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் என்ற இரட்டை இயக்குனர்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் இருவரும் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவியாளர்களாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள்.