நேர்மறையான படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் அடுத்து கொடுத்திருக்கும் நேர்மையான படம் ஜெய்பீம்
1995 காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவி அமைக்கப்பட்ட திரைக்கதை தான் என்றாலும் இப்படியான ஒரு வலியை எப்படி இப்படி ஓர் அற்புத சினிமாவாக எடுக்க முடியும்? என்ற கேள்வி படம் பார்த்த பின் உங்கள் மனதில் தோன்றும். இனி படத்தை பார்த்துவிட்டே கூட விமர்சனத்தைத் தொடரலாம்
செய்யும் தொழிலில் நேர்மை, தன் மனைவி குழந்தைகளோடு வாழ செங்கல் வைத்த ஒரு வீடு என்ற எளிய கனவோடு இருக்கும் இருளர் மணிகண்டனை ஒரு திருட்டு வழக்கில் போலீஸ் கைது செய்கிறது. கையில் ஒரு பிள்ளை வயிற்றில் ஒருபிள்ளை என வைத்திருக்கும் மண்கண்டனின் மனைவியான லிஜோமோல் கணவனை மீட்க வழக்கறிஞர் சூர்யாவை நாடுகிறார். இந்தக் கைதுக்குப் பின்னால் இருக்கும் மனிதவெறியை கண்டுபிடிக்கும் சூர்யா அதை தகர்த்தெறிய எப்படியான சட்டப்போராட்டத்தை எடுக்கிறார் என்பதே கதை
படத்தின் முதல்காட்சியே நமக்குள் பெரும் அதிர்வையும் வலியையும் ஏற்படுத்தி விடுகிறது. மேலும் இவை நிஜ சம்பவம் என்பதால் நமக்குள் ஓர் நடுக்கமும் நிகழ்கிறது. எப்படியாவது இப்படியான பொய்வழக்கு அநியாயத்திற்கு ஒரு முடிவு வேண்டும் என்று மனம் இயல்பாகவே இறைஞ்சத் துவங்கிவிடுகிறது. இதுதான் ஒரு நல்ல படத்தின் நிஜமான வெற்றி. முதல் படத்திலே ரசிகனை மனிதம் நோக்கி மடை மாற்றும் இயக்குநர் த.செ.ஞானவேலுக்கு வாழ்த்துகள்
படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக நடித்திருக்கும் சூர்யா மனிதம் நிறைந்த மனிதராக படமெங்கும் மிளிர்கிறார். அவர் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கும் வாதங்களாக இருக்கட்டும். பிரகாஷ்ராஜிடம் பேசும் அதிகார அத்துமீறல் குறித்த விசயங்களாகட்டும் அனைத்துமே அனல். லிஜோமோலின் நடிப்பு நம் அனைவரின் மனதையும் விட்டு அவ்வளவு எளிதில் அகலாது. பிரகாஷ்ராஜ் தவிர வேறுயாரும் அந்தக் கேரக்டருக்கு இப்படியொரு நிறைவு செய்திருக்க முடியாது. மணிகண்டனின் அப்பாவித்தனமும் வெகுளித்தனமும், அடிவாங்கும் போது அவர் தாங்கும் வலிகளும் நம்மை வலி ஏற்கச் செய்கிறது. மேலும் துணைக் கதாப்பாத்திரங்களாக வரும் குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட அனைவருமே சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
SR.கதிரின் ஒளிப்பதிவின் தரம்..நிச்சயமாக ஆகத்தரம். வலி நிறைந்த காவல்நிலைய காட்சிகளும், அனல் கிளப்பும் நீதிமன்ற காட்சிகளும் கதிரின் கேமரா கோணங்களால் இன்னும் வலிமை பெறுகிறது. ஷான்ரோல்டனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்குப் பெரும்பலம்
ஒரு கமர்சியல் படத்திற்கான எல்லா விறுவிறுப்புகளையும் இக்கதையில் நுழைத்திருப்பது அட்டகாச கலைத்திறமை. காவல்துறையின் அத்துமீறல்களையும் காவல்துறைக்கு களங்கம் வந்து விடக்கூடாதென்று துடிக்கும் அதிகார வர்க்கத்தின் சாமர்த்தியத்தையும் நெத்தியில் அடித்துச் சொல்லி இருக்கிறார் இயக்குநர். இப்படியான படங்கள் கமர்சியலாகவும் மக்களிடம் போய் சேர்ந்தால் தான் மக்களுக்கு மனிதம் என்பது மறவாமல் இருக்கும். அறத்திற்கு எதிரான சம்பவங்களுக்கு மக்கள் கேள்விகளும் கேட்பார்கள்.
ஜெய்பீம்- விடுதலை முழக்கம்..அதுவே வெற்றி முழக்கம்
4/5