சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் சென்ற வாரம் ரிலீசான ‘டிக் டிக் டிக்’ படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்திருக்கிறது. அதுதான் ஜெயம் ரவியின் சந்தோஷத்துக்குக் காரணம்.
இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்கிற பெருமையோடு ரிலீசான இந்தப் படத்தில் ஜெயம் ரவியின் மகனாக அவரது சொந்த மகன் ஆரவ் ரவியும் நடிகராக அறிமுகமானது கூடுதல் சந்தோஷம்.
அந்த இரட்டிப்பு சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள மகன் ஆரவ் ரவி மற்றும் குடும்பத்தினருடனும், தயாரிப்பாளரைத் தவிர மற்ற படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட சந்திப்பில் மகன் ஆரவ் ரவியின் பிறந்த நாளையும் கேக் வெட்டி கொண்டாடினார்.
அப்போது பேசிய ஜெயம் ரவி ”என் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம். உன் உழைப்பை கொடு, வெற்றி வரும்போது வரும் என்பது தான் என் குடும்பம் கற்றுக் கொடுத்த தாரக மந்திரம்.
படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ரசிகர்கள் தான். நாம் என்ன கொடுத்தாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தான் வெற்றி. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்க்க காரணம் இயக்குனர் சக்தி செளந்தர் ராஜன் தான்.
கதையை கேட்ட தயாரிப்பாளர்கள் யாருக்கும் படத்தின் மீது நம்பிக்கை இல்லை, கதையை உணர்ந்து நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் ஜபக் சாருக்கு நன்றி. என் மகன் ஆரவ் நடித்த ‘குறும்பா’ பாடலை 2000 முறையாவது பார்த்திருப்பேன். எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது என் அண்ணன், நான் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதற்கு அவரும் ஒரு காரணமாக இருக்கிறார்.
என் மகன் ஆரவ் ரவியின் நடிப்புக்கு நீங்கள் அங்கீகாரம் கொடுத்திருக்கிறீர்கள். அதனால் அவனை விரைவில் ஹீரோவாக்குவேன். அவன் ஹீரோவாக நடிக்கப் போகும் முதல் படத்தை நானே இயக்குவேன் என்றவர், அருகில் இருந்த அண்ணனும், இயக்குனருமான மோகன் ராஜாவிடம் செல்லமாக ஸாரி…யும் கேட்டுக் கொண்டார்.
சந்திப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன், மாஸ்டர் ஆரப் ரவி, விஎஃப்எக்ஸ் அருண், ஸ்டண்ட் மாஸ்டர் மைக்கேல், எடிட்டர் பிரதீப், கலை இயக்குனர் மூர்த்தி, ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.