காலக்கூத்து – விமர்சனம்

RATING 2/5

நடித்தவர்கள் – கலையரசன், பிரசன்னா, தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே மற்றும் பலர்

ஒளிப்பதிவு – பி வி சங்கர்

இசை – ஜஸ்டின் பிரபாகரன்

இயக்கம் – எம். நாகராஜன்

வகை – நாடகம், ரொமான்ஸ்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 2 நிமிடம்

சுய கெளரவம் பார்ப்பதால் விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாவது தடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்தை நட்பு, காதல், கொஞ்சம் ரத்தமுமாக சொல்ல வந்திருக்கும் படம் தான் இந்த ‘காலக்கூத்து’.

தென் மாவட்டங்களில் சாதிய வேற்றுமையால் நடக்கும் கெளரவக்கொலைகள் சர்வ சாதாரணம். அப்படி ஒரு கதையை மதுரைப் பின்னணியில் சொல்லியிருக்கிறார்கள்.

பிரசன்னாவும், கலையரசனும் பள்ளிக் காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். இதில் ஜாலியான இளைஞனாக இருக்கும் கலையரசனை தன்ஷிகா காதலிக்கிறார். இருக்கமான முகத்தோடு இருக்கும் பிரசன்னாவை சிருஷ்டி டாங்கே காதலிக்கிறார்.

எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் இருவரின் வாழ்க்கையிலும் ஏரியா கவுன்சிலரின் தம்பி ரூபத்தில் பிரச்சனை வருகிறது.

கலையரசனின் தங்கையை கிண்டல் செய்யும் கவுன்சிலரின் தம்பியை பொது இடத்தில் பிரசன்னா அடித்து விட, அவனை பழிக்குப் பழி வாங்க காத்துக் கொண்டிருக்கிறது வில்லன் கோஷ்டி.

அதோடு இருவரின் காதலுக்கும் சிக்கல் வருகிறது. அதிலிருந்து காதல் ஜோடிகள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நெருங்கிய நண்பர்களாக வரும் கலையரசனும், பிரசன்னாவும் சரியானத் தேர்வு. இருவரின் நட்புக்கும் இன்னும் அழுத்தமான காரணத்தை காட்சிகளாக வைத்திருக்கலாம். எதற்காக பிரசன்னா இருகிய முகத்தோடு இருக்கிறார் என்பதிலும் தெளிவு இல்லை.

கலையரசன் – தன்ஷிகா காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் கேலி, கிண்டல், கெஞ்சல் என செம ஜாலி என்றால் பிரசன்னா – சிருஷ்டி டாங்கே காதல் காட்சிகள் அமைதி, அன்பு, பயம், துணிச்சல் கலந்த மென்மையான கவிதை.

அதே சமயத்தில் தானே முன் வந்து பிரசன்னாவை துரத்தி காதலித்த சிருஷ்டி டாங்கே எதற்காக திடீரென்று அவரை கழற்றி விடுகிறார் என்பதில் குழப்பம்.

பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல இயல்பான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் தன்ஷிகா. வீட்டுக்கு பயப்படும் அடக்க ஒடுக்கமான பெண்ணாக வரும் சிருஷ்டி காதலிக்கிற விஷயத்தில் துணிச்சலான முடிவை எடுப்பவர் அதே துணிச்சலை திருமணத்தில் ஏன் எடுக்கவில்லை என்பது ஆச்சரியமே?

படத்தில் மிகப்பெரிய ஆறுதல் ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் தான். ‘கண்ணக் கட்டி..’, ‘அல்லி கொடியே…’ என அத்தனை பாடல்களும் அருமை. பி வி சங்கரின் ஒளிப்பதிவும் கூடுதல் பலம்.

அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று படம் பார்ப்பவர்களை எதிர்பார்க்க வைக்கும் காட்சிகள் இல்லாதது திரைக்கதையின் பெரும் பலவீனம். கூடவே இதுவும் மதுரைப் பின்னணிப் படமா? என்கிற சலிப்பையும் தருகிறது.

ஊரில் வசிக்கும் இரண்டு நண்பர்களின் நட்பை அதன் இயல்பு மாறாமல் படமாக்கித் தர முயற்சித்ததற்காக அறிமுக இயக்குனர் எம். நாகராஜனை பாராட்டலாம்.

DhansikaKaala koothuKaala Koothu Movie ReviewKaala Koothu ReviewKalaiyarasanM NagarajanMovie ReviewPrasannasrushti dange
Comments (0)
Add Comment