‘சதுரங்க வேட்டை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மனோபாலா தயாரித்த இரண்டாவது படம் தான் ‘பாம்பு சட்டை’.
ஷங்கரின் உதவியாளர் ஆடம் தாசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், முக்தா பானு உள்ளிட்டோர் நடித்த இந்தப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
பல கட்ட இன்னல்களைத் தாண்டி ரிலீசான படமாக இருந்தாலும் இப்போது பலரும் பாராட்டும் படமாக அமைந்திருப்பது தான் இப்படத்தின் சிறப்பு.
இந்தப் படம் பார்த்த பலரும் இயக்குநர் ஆடம் தாசனைப் பாராட்டியுள்ளனர். அந்த வரிசையில் சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்தார் பிரபல இயக்குநர் பா ரஞ்சித். பார்த்தவுடன் இயக்குநர் ஆடம்தாசனை நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்.
படம் குறித்து பா ரஞ்சித் கூறுகையில், “நல்ல சினிமா தர வேண்டும் என்ற ஆடம்தாசனின் முயற்சி படம் முழுக்க தெரிகிறது. அனைவரும் தியேட்டருக்குப் போய்ப் பார்க்க வேண்டிய படம் இது. மிகத் துணிச்சலான கதை, பாத்திரப்படைப்பு அருமை,”, என்றார்.