இது பெண்ணின் பெருமைகளை பேசும் படமா? என்கிற விவாதத்தை கிளப்பி விட்ட கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி’ படம் தயாரிப்பாளர் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
படத்தில் தயாரிப்பாளர்களைப் பற்றி அவர் சித்தரித்து வைத்திருந்த காட்சிகள் தான் இந்த கொந்தளிப்புக்கு முக்கிய காரணம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்குநராக அறிமுகமான படம் ‘பீட்சா’. அந்தப் படத்தைத் தயாரித்த சி.வி. குமார் தான் ‘இறைவி’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்திருந்தார்.
முதல் படத்தை சில கோடிகளிலேயே முடித்துக் கொடுத்து விட்ட கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை சொன்ன பட்ஜெட்டான 7 கோடியைத் தாண்டி சுமார் 13.5 கோடி வரை செலவை இழுத்து விட்டு விட்டாராம்.
இந்த இரண்டு மடங்கு செலவால் அதிர்ச்சியடைந்திருக்கும் தயாரிப்பாளர் சி.வி.குமார் ‘இறைவி’ படம் லாபம் தந்தால் மட்டுமே அவர் தொடர்ந்து படங்களை தயாரிப்பார் இல்லையென்றால் அவராலும், அவரது குடும்பத்தாலும் அடுத்தடுத்த படத்தயாரிப்பு செலவுகளை தாங்கவே முடியாது என்று கூறியிருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா.
ஏற்கனவே பல தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்புராஜூக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்ற நிலையில் ‘இறைவி’ பட சர்ச்சை குறித்து ஞானவேல்ராஜா ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் கார்த்திக் சுப்புராஜைப் பற்றிய பல உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்…
”15 வருஷம் 20 வருஷம் ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டராக கஷ்டப்பட்டு போராடி சினிமாவில் வாய்ப்பைப் பெற்ற கஷ்டத்தை கூட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படவில்லை. வந்தாரு.. வந்த உடனே 6 மாசத்துல வாய்ப்பு கெடைச்சது. சி.வி.குமார்னு ஒரு புதுத்தயாரிப்பாளர் அவருடைய கதையைக் கேட்டு உடனே அதை தயாரிக்க சம்மதிச்சு ஒரு ரிஸ்க்கை எடுத்து அவரை உருவாக்கி விட்டிருக்கிறார்.
அப்பேர்ப்பட்ட சி.வி.குமாருக்கு திரும்பவும் இந்த ‘இறைவி’ படத்தை இயக்கிக் கொடுத்தார். ஆனால் இது கண்டிப்பா ஒரு அவார்டு படம் தான். கமர்ஷியல் படம் இல்லை. அப்படிப்பட்ட படத்துல இவ்வளவு பெரிய நடிகர் பட்டாளத்தை வெச்சுக்கிட்டு சொன்ன பட்ஜெட்டை விட அதிகமா கொண்டு வந்து இந்தப் படத்தை முடிச்சிருக்காப்ல.
போன ‘ஜிகர்தண்டா’ படத்துல தயாரிப்பாளர் கதிரேசன் என்ன அவஸ்தைப் பட்டாரோ? அதைவிட இரண்டு மடங்கு அவஸ்தை இந்தப் படத்தில் தயாரிப்பாளராக சி.வி.குமாருக்கு இருந்துச்சு. எல்லாம் முடிச்சு இந்தப் படத்தை கொண்டு வந்து சேர்க்கிறப்போ அந்த கடனையும் அந்தப் பிரச்சனைகளையும் தாங்கிட்டு இந்தப்படத்தை ரிலீஸ் பண்ண வேண்டிய சூழ்நிலையில சி.வி.குமார் இருந்தார்.
இப்போ 1 கோடியோ, 2 கோடியோ கடன் இருந்தால் கூட மீண்டும் சி.வி.குமார் மதுரைக்குத்தான் கிளம்பிப் போகணும். அப்படிப்பட்ட சூழ்நிலையில இந்தப் படத்தோட பட்ஜெட்டை 13.5 கோடி பட்ஜெட்ல கொண்டு வந்து நிறுத்தி விட்டார் கார்த்திக் சுப்புராஜ். அவர் சொன்ன பட்ஜெட் வேற. இவ்வளவு பிரச்சனைகளையும் தாங்கிட்டு இந்த ‘இறைவி’ படத்தைப் பற்றி ஏதாவது தவறா வந்துச்சுன்னா அவரையும், அவரது குடும்பத்தையும் யாராலும் காப்பாத்த முடியாது. அப்படி ஒரு சூழ்நிலையில தான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்.
யாருக்கு வலியோ இல்லையோ இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு தயாரிப்பாளர்களை சித்தரித்த விதத்தைப் பார்த்து பெரிய வலி ஏற்பட்டது. இந்தப் படத்தை எப்படியாவது ரிலீஸ் பண்ணிடனும்னு நெனைச்சார். அந்த போராட்டத்தில் தான் அவர் இருந்தார். தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்த கார்த்திக் சுப்புராஜ் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு ஞானவேல்ராஜ் கூறியிருக்கிறார்.
முதல் பட வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளரையே கதற விட்டுட்டீங்களே? நியாயமா கார்த்திக் சுப்பராஜ்?