கேரளாவில் இருக்கும் சுதந்திரம் தமிழ்நாட்டில் இல்லை! – பார்த்திபன் பகிரங்க குற்றச்சாட்டு

கேரளாவைப் போல் தமிழ்நாட்டில் விமர்சனம் செய்யும் சுதந்திரம் இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார் நடிகர் பார்த்திபன்.

புதுமுக இயக்குநர் எம்.ஏ. நிஷாத் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் திரைப்படம் “கேணி”.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஜெயப்ரதா, பார்த்திபன், ரேவதி, ரேகா, அனுஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சுஹாசினி மணிரத்னம் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்த்திபன் பேசுகையில், “இந்த நிகழ்ச்சி நடைபெரும் இடம் க்ரீன் பார்க், பசுமைப் பூங்கா. இந்த இடம் மட்டுமே பசுமைப் பூங்காவாக இல்லாமல், இந்த நாடே பசுமைப் பூங்காவாக மாற வேண்டுமெனில் முக்கியமாக தண்ணீர் தேவை.

ஆன்மீக அரசியலைப் பற்றி சமீபத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள், இது நீர்மீக அரசியல் பேசும் படம். இந்த நாட்டில் தண்ணீர் பிரச்சினை தீர வேண்டுமெனில் நதிகளை இணைக்க வேண்டுமென எல்லோரும் சொல்கிறார்கள். அதற்கு மனித மனங்களை இணைக்க வேண்டும். அப்படி இதயங்களை இணைக்கும் ஒரு படமாக நிச்சயமாக “கேணி” இருக்கும்.

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு கேரள எல்லைக்குள் பிரிக்கப்படுகிற தமிழகத்தைச் சேர்ந்த கிணற்றுக்காக கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சேர்ந்து தமிழர் ஒருவர் போராடுவதே “கேணி” படத்தின் கதை. இந்தப் படத்தை எடுத்திருப்பதும் ஒரு மலையாளி. பொதுவாக நீர் பிரச்சனை என்பது தமிழர்கள் சம்பந்தப்பட்டதோ, மலையாளிகள் சம்பந்தப்பட்டதோ இல்லை. அது மனிதர்கள் சம்பந்தப்பட்டது. தண்ணீரை வைத்துக் கொண்டு கேரளாவோ தமிழ்நாடோ அரசியல் செய்யலாம், ஆனால் கலைஞர்கள் அந்த அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். ஏனென்றால் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலையில்லை, பிரச்சனைகளைப் பேசிக்கொண்டே தான் இருப்போம்.

தமிழகத்தை விட கேரளாவில் கலைஞர்களுக்கான சுதந்திரம் என்பது அதிகமாக இருக்கிறது, அது பாராட்டிற்குரியது. அங்கே திருவனந்தபுரம் ராஜாவைக் கூட விமர்சனம் செய்யலாம், இங்கே யாரையுமே விமர்சனம் செய்ய முடிவதில்லை. அதனால் தான் நல்ல விசயத்தை சொல்லும் இந்த “கேணி” படத்திற்குள் என்னையும் இணைத்துக் கொண்டேன்.

எனக்கு பெரியார் விருது கொடுத்த போது சில விஷயங்கள் பேசினேன். அதற்கு கூட சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்தளவிற்கு சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் பார்க்கப் போனால் கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளம் சிறந்து விளங்குகிறது. இந்தப் படம் நல்ல தீர்வை நோக்கி அழைத்துச் செல்லும் என்பது பாராட்டிற்குரியது” என்றார் பார்த்திபன்.

விழாவில் சுஹாசினி மணிரத்னம் இசைத் தட்டை வெளியிட ஜெயப்ரதா, பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

Audio LaunchKeni Movie Audio LaunchKeni Movie Audio Launch NewsParthiepanParthiepan Speech
Comments (0)
Add Comment