”நல்ல படம் எடுத்தா ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து பார்க்க யோசிப்பதில்லை” என்று திரையுலக பிரபலங்கள் திரையுலக விழாக்களில் மேடைக்கு மேடை முழங்குகிறார்கள். அதில் நூறு சதவீத உண்மையும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் மேடையில் பேசிவிட்டு அடுத்த நாளே மாஸ் ஹீரோக்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து படமெடுக்க சென்று விடுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
அதேபோலத்தான் இருக்கிறது தியேட்டர் அதிபர்களின் செயல்பாடும்!
சென்ற வெள்ளிக்கிழமை ரிலீசாகி விமர்சகர்களாலும், ஏன் தியேட்டரில் படத்தை ஓட்டுகிற ஆபரேட்டர்களாலும் கூட பெரிதாகப் பாராட்டப்பட்ட படம் ‘கோடை மழை’.
இந்தப் படத்துக்கு சரியான எண்ணிக்கையிலும், நல்ல தியேட்டர்களும் கிடைக்காத காரணத்தினாலேயே படம் மக்கள் மத்தியில் முழுதாக போய்ச் சேரவில்லை.
நடிகர் பிரபுதேவாவிடம் உதவியாளராக பணியாற்றிய கதிரவனின் முதல் படம் தான் இந்த ”கோடை மழை”. புதுமுகம் கண்ணன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘கங்காரு’ ப்ரியங்கா நடித்திருக்கிறார்.
அண்ணன் தங்கை பாசம் ப்ளஸ் கிராமத்து காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காததால் ரசிகர்களால் ஒரு நல்ல படத்தை பார்க்க முடியாத சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
”என்ன பண்றதுன்னே தெரியல சார், பெரிய பெரிய தியேட்டர்கள், மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள்கிட்ட தியேட்டர்கள் கேட்டப்போ பேனர் வேல்யூ வேணும்கிறாங்க, ஹீரோ பெரிய ஹீரோவா இருக்கணும்கிறாங்க… இல்லேன்னா பெரிய கம்பெனிகள் மூலமா வாங்கன்னு சொல்றாங்க. இப்பெல்லாம் படம் எடுக்கிறதை விட அதை ரிலீஸ் பண்றது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு.
சினிமாவுல இருக்கிற சில குறிப்பிட்ட கம்பெனிகள் தமிழ்நாட்ல இருக்கிற எல்லா தியேட்டர்காரங்ககிட்டேயும் ஒப்பந்தம் போட்டு வெச்சிட்டு அவங்களோட படத்துக்குத்தான் ரிலீஸ்ல முன்னுரிமை கொடுக்குறாங்க. இப்படி பண்ணினா எப்படி நல்ல படங்களை ரசிகர்கள்கிட்ட கொண்டு போக முடியும்” என்று ஆதங்கப்படுகிறார் இயக்குநர் கதிரவன்.
‘கோடை மழை’யில் நாயகியாக நடித்திருக்கும் ப்ரியங்காவுக்கும் அதே கவலை தான்.
” காசு பணத்தைப் பார்க்காம, நல்ல கதையம்சம் உள்ள படத்துல நடிச்சு ரசிகர்கள் கிட்ட நல்ல நடிகைன்னு பேர் வாங்க ஆசைப்படுற எங்களை மாதிரி நடிகைகளுக்கு நாங்க நடிச்ச படம் சரியா ரிலீஸ் ஆகலேன்னா அது ரொம்ப வருத்தமா இருக்கு. படத்தைப் பத்தி கேள்விப்படுற எல்லாரும் படம் பார்க்க ஆவலாக இருந்தாலும் எந்த தியேட்டர்ல படம் ஓடுதுன்னு தேட வேண்டியிருக்கு” என்கிறார் ப்ரியங்கா.
எந்த விழாவுக்கு வந்தாலும் ”சின்ன படங்களை நம்பித்தான் நாங்க தியேட்டர்களை நடத்துகிறோம்” என்று பேசும் அபிராமி தியேட்டர் அதிபர் ராமநாதன் கூட ‘கோடை மழை’ படத்துக்கு தன்னுடைய தியேட்டரில் ஒரு காட்சியும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல படத்துக்கு முதல்ல தியேட்டர் கொடுங்கப்பா…