விக்ரம் பிரபுவிற்கு வெற்றியைத் தருகிறதா இந்த லவ்மேரேஜ்
பல பெண்களால் நிராகரிக்கப்பட்ட நாயகன் விக்ரம் பிரபுவிற்கு கோபிச்செட்டிப்பாளையம் ஊரில் ஒரு பெண் கிடைக்கிறது. அந்தப் பெண்ணை நிச்சயம் செய்வதற்காக மதுரையிலிருந்து விக்ரம் பிரபு குடும்பம் கோபிச்செட்டிப்பாளையம் செல்கிறது. இவர்கள் போய்ச்சேர்ந்த நேரம் கொரோனா லாக்டவுன் வருகிறது. மணப்பெண்ணும் இன்னொருவரோடு ஓடிப்போகிறார். அதன்பின் விக்ரம் பிரபு கல்யாணம் என்னானது? என்பதற்கு மீதிப்படம் பதில் சொல்கிறது
தனக்கேற்ற மீட்டர் கதை என்பதால் விக்ரம் பிரபு சரியாகப் பொருந்துகிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் மட்டும் முத்திரைப்பதிக்கத் தவறுகிறார். நாயகி சுஷ்மிதா பட் இயல்பாக நடித்துள்ளார். மீனாட்சி தினேஷ் அழகால் கவர்வது மட்டுமல்லாமல் நடிப்பாலும் கவர்கிறார். படத்தில் வில்லன் இல்லாத குறையை தனது சிறப்பான நடிப்பால் தீர்த்து வைக்கிறார் அருள்தாஸ். கஜராஜ், கோடாங்கி வேல்முருகன், ரமேஷ் திலக் உள்பட பலரும் படத்திற்குத் தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளனர்
ஷான் ரோல்டன் நல்ல இசையால் பாடல்களை அழுத்தமாக கொடுத்துள்ளார். மிஷ்கின் பாடிய ‘எடுடா பாட்டிலை’ பாட்டு நல்ல வைப். ஆனால் பின்னணி இசையில் அழுத்தமில்லை. மதன் கிறிஸ்டோபர் கோபிச்செட்டிப்பாளையம் அழகை தனது கேமராவில் மொத்தமாக அள்ளிக்கொண்டு வந்துள்ளார்
குட்டியான கதையை கூடுமான வரை கெட்டியான திரைக்கதையால் பாசிட்டிவாக சொல்லியுள்ளார் இயக்குநர் சண்முகபிரியன். முதல் பாதியில் படத்திற்குள் இருந்த கோர்வை இரண்டாம் பாதியில் சற்று இடறியுள்ளது. ஒரு காதல் பாடல் கூட பின்பாதியில் தேவையற்ற சொருகல். இன்னும் ஷார்ப்பாக அணுகியிருந்தால் படம் சிறப்பாக வந்திருக்கும். இருப்பினும் நிச்சயமாக படம் சோர்வடைய வைக்காது
3/5