தனி மனுஷனாக ‘திருட்டு விசிடி’ கும்பலைப் பிடித்த தயாரிப்பாளர்!- 1 லட்சம் ரூபாய் பரிசு கொடுப்பாரா விஷால்?

‘திருட்டு விசிடி’ கும்பலை ஒழிக்காமல் ஓய மாட்டேன் என்று பல திரைப்பட விழா மேடைகளில் சபதம் போட்டவர் நடிகர் விஷால்.

தன்னுடைய படங்கள் மட்டுமில்லாமல் மற்ற ஹீரோக்களின் படங்களின் திருட்டு விசிடிக்கு எதிராகவும் அவர் அவ்வப்போது காட்டிய சில அதிரடி ஆக்‌ஷன்களைப் பார்த்து திரையுலகமே ஆச்சரியப்பட்டுத்தான் போனது.

ஆனால் விஷாலின் கரிசனமும் அவருக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த தலைமைகளைப் போல பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும் தான் இருக்கும்? என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது ‘மனுஷனா நீ’ பட விவகாரத்தில்!

தயாரிப்பாளரும், இயக்குநருமான கஸாலி இயக்கத்தில் ‘மனுசனா நீ’ என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீசானது. தியேட்டர்களில் ரிலீசான அதே வேகத்தில் ஆன்லைனிலும் படம் வெளிவந்ததைப் பார்த்ததும் கஸாலிக்கே பேரதிர்ச்சி. உடனடியாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு புகார் மனு கொடுத்து விட்டு, படம் எந்த தியேட்டரில் எடுக்கப்பட்டது? என்கிற விபரத்தையும் க்யூப் டிஜிட்டல் நிறுவனம் மூலம் அறிந்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி கேட்டிருக்கிறார். ஆனால் பல நாட்களாகியும் அவருடைய கேள்விக்கு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பதிலே இல்லை.

இதற்கு மேலும் தாமதித்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்தவர் ஒற்றை மனுஷனாக ‘ஜுனியர் விகடன்’ வார இதழின் துணையோடு ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார்.

கிருஷ்ணகிரி ‘முருகன்’ என்ற தியேட்டரில்தான் அந்தப்படம் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு இருந்தது தெரிய வரவும், அந்த மாவட்ட காவல் துறை அதிகாரிகளிடம் விஷயத்தை ஜுனியர் விகடன் மூலமாக கொண்டு சென்று, அவர்கள் உத்தரவின் பேரில் தியேட்டர் அதிபரையும் திருட்டு விசிடி எடுக்க உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ய வைத்திருக்கிறார்.

ஆன்லைன் பைரஸுக்கு ஈழத்தமிழர்கள் தான் காரணம் என்று கண்ணுக்குத் தெரியாதவர்கள் மீது கடும் கோபம் கொள்வோர் கண்ணுக்குத் தெரிந்த கயவர்களை கண்டுகொள்ளாமல் மேடையில் ஆவேசக் குரலில் முழங்குவது எந்த விதமான நடுநிலை என்று தெரியவில்லை.

பின் குறிப்பு : சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் ‘விளையாட்டு ஆரம்பம்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் ”தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறோம். தியேட்டரில் படம் ஓடும்போது அதை கேமரா வைத்து காப்பி செய்து திருட்டு விசிடி, பைரஸி தயாரிக்க வேலை செய்பவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்ய (எப்ஐஆர்) உதவுபவருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் பரிசாக தரப்படும்” என்று தடாலடியாக அறிவித்திருந்தார் விஷால்.

”மனுஷனா நீ” திரைப்படத்தை திருட்டு விசிடி எடுத்த கும்பலையும், அதற்கு உதவி செய்த தியேட்டர் உரிமையாளரையும் ஆதாரத்தோடு பிடித்து விட்டார் தயாரிப்பாளரும், இயக்குநருமான கஸாலி.

விழா மேடையில் பேசியபடி தயாரிப்பாளர் கஸாலிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு கொடுப்பாரா விஷால்?

Manushana Neepirated dvd GangProducer CouncilProducer Ghazalivishal
Comments (0)
Add Comment