RATING : 2.3/5
இந்தியாவின் ஒரே எதிரி நாடு பாகிஸ்தான் !
இப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் கிரிக்கெட்டை கொண்டாடுகிற எல்லோரும்! ஆனால் இந்தியாவுக்கு சைலண்ட்டா இம்சையைக் கொடுக்கிற நாடு சீனா தான் என்கிற சீக்ரெட்டை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சுகன் கார்த்தி.
இந்திய மக்களை போட்டுத்தள்ளுவதற்காக தங்கள் ராணுவ வீரர்களை இந்தியாவுக்குள் அனுப்புகிறது சீன ராணுவம். அப்படி வந்தவர்கள் சொன்ன வேலையையும் செய்யாமல், என்ன ஆனார்கள் என்கிற தகவலும் இல்லாமல் போக, கடுப்பில் இருக்கும் சீன ராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார் இந்திய நாட்டு ராணுவ மேஜரான சுனில்குமார்.
யாருக்கும் தெரியாத பாதாள சிறைக்குள் அவரை அடைத்து சிறுக சிறுக சித்ரவதை செய்து ”எங்க நாட்டோட ராணுவ வீரர்களோட கதி என்னாச்சு?” என்பதையே திரும்ப திரும்ப கேட்கிறார்.
சொல்ல மாட்டேன் என்கிறார் ஹீரோ? அவரோ சொல்லும் வரை விட மாட்டேன் என்கிறார்?
கிளைமாக்ஸ் வரை டிசைன் டிசைனாக அந்த ‘டார்ச்சரி’டமிருந்து சுனில் தப்பித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
ஹீரோவாக நடித்திருக்கும் சுனில் குமார் மேஜர் உடையில் கனகச்சிதம். தான் பிறந்த இந்திய நாட்டை எந்தளவுக்கு நேசிக்கிறேன் என்பதற்கு அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடையே தேசப்பற்றை உணர்த்துபவை.
ஆக்ஷன் ஹீரோவுக்குரிய உசரம் இருப்பதால், நடிப்பில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா உழைப்பைப் போட்டால் வருஷத்துக்கு மூன்று படங்களாவது ஹீரோ வேஷம் கட்டலாம்.
ஹீரோயினாக வரும் அகிலா கிஷோருக்கு காதல் காட்சிகளை விட, அழுது புலம்பும் சோகக் காட்சிகளே அதிகம். அதிலும் ஆல் பாஸ்.
சீன ராணுவ மேஜராக வரும் சிங்கப்பூர் நடிகர் வில்சன் என்.ஜி நடிப்பில் மட்டுமல்ல, வசன உச்சரிப்பிலும் கூட ரொம்ப கஷ்டப்படுகிறார். சீரியஸாக அவர் செய்யும் டார்ச்சர்கள் எல்லாமே திரையில் காமெடியாகத்தான் இருக்கிறது.
2025-ல் நடக்கும் போர் சம்பந்தப்பட்ட படமென்பதால் பட்ஜெட்டுக்கேத்த பிரம்மாண்டத்தை தொழில்நுட்ப உதவியுடன் திரையில் காட்டியிருக்கிறார்கள்.
அதற்கு ஒளிப்பதிவாளர் தேவாவும், எடிட்டர் ரிச்சர்ட்டும் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறார்கள்.
வேத் சங்கரின் இசையில் ”அன்பே என் அன்பே”, ”இந்திய நாடே” இரண்டு பாடல்களும் தனித்தனி டோன்களில் ஈர்க்கின்றன. போர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பின்னணி இசை பக்க பலம்.
முதல் பாதியில் பாதாள அறை, இரண்டாம் பாதியில் நீர் மூழ்கிக் கப்பல் என முழுப்படத்திலும் பட்ஜெட் பற்றாக்குறை அப்பட்டமாகத் தெரிகிறது.
அதனாலேயே திரைக்கதையில் சுவாரஷ்யங்களை எதிர்பார்த்துப் போகிற ரசிகர்கள் ஏமாற்றமடைகிறான்.
அதைத் தவிர்த்து விட்டு 2025 ல் இந்தியாவுக்கும் – சீனாவுக்கும் போர் நடக்கும் என்றால் அது பாகிஸ்தான் பாணியில் ‘ஆயுதப்போர்’ இல்லை. இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கப் பார்க்கும் ‘பொருளாதாரப் போர்’ என்கிற உண்மையை பளிச்சென்று திரையில் காட்டியிருக்கிறார்.
அந்த நல்ல முயற்சிக்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம்.
மூன்றாம் உலகப்போர் – மினிமம் பட்ஜெட்டில் ஒரு ஹாலிவுட் முயற்சி!