இன்னும் பரபரப்பா… விறுவிறுப்பா… – ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் 20 நிமிடக் காட்சிகள் ‘கட்’!

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், மெஹ்ரீன், விக்ராந்த் நடிப்பில் கடந்த வெள்ளியன்று நவம்பர் 10-ம் தேதி வெளியான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்.’

ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தில் உள்ள சில குறைகளை விமர்சகர்கள், ரசிகர்கள், நலம் விரும்பிகள் ஆகியோர் சுட்டிக் காட்டியதையடுத்து படத்தில் சுமார் 20 நிமிடக் காட்சிகளை வெட்டியெறிந்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் 20 நிமிடக் காட்சிகளை நாங்கள் நீக்கி உள்ளோம். குறிப்பாக கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் நீக்கி விட்டோம். அதேபோல படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் புதிய வெர்சன் இன்று( நவம்பர் 13ம் தேதி) நண்பகல் 12 மணி முதல் அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு உள்ளது.

ஹீரோயின் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நாங்கள் 15 நாட்கள் படமாக்கினோம். சூழ்நிலை காரணமாக படத்திலிருந்து அவர் நடித்த எல்லாக் காட்சிகளையும் நீக்க வேண்டியதாகி விட்டது. இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மெல்ல திறந்தது கதவு, பன்னீர் புஷ்பங்கள், குஷி, வெயில் போன்ற படங்கள் எல்லாம் ரிலீசுக்கு பிறகு அரை மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் சினிமாவில் இது ஒன்றும் புதுசு இல்லை என்றார்” சுசீந்திரன்.

மெஹ்ரீனுக்கு தமிழில் இது முதல் அறிமுகப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Nenjil ThunivirundhalSundeep KishanSuseenthiranVikranth
Comments (0)
Add Comment