Rating : 3.3/5
இதுநாள் வரைக்கும் தனது இளவட்ட ரசிகர்களுக்காக படம் நடித்த விஜய் இந்தப்படத்தை அவர்களது குழந்தைகளுக்காக, குடும்பத்தோடு போய் பார்த்து ரசிப்பதற்காக நடித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
வழக்கமான விஜய் படங்களில் இருக்கும் ஹெவி ஆக்ஷன், கமர்ஷியல் சமாச்சாரங்கள் ஆகியவை தான் இதிலும் இருக்குமோ? என்கிற எண்ணத்தையெல்லாம் எல்லாம் மூட்டை கட்டி விடுங்கள்.
பழைய ‘அம்புலிமாமா’ புத்தகங்களை அடுக்கி வைத்து படிக்கும் போது அந்த உலகத்துக்குள்ளேயே போய் வந்த ஒரு பரவச அனுபவம் கிடைக்குமே? அப்படி ஒரு மாயாஜால அனுபவம் தான் இந்தப் ‘புலி’.
கண்டிப்பாக ‘துப்பாக்கி’, ‘கத்தி’ போன்ற படங்களில் கிடைத்த எபெக்ட் சுத்தமாக இதில் கிடைக்காது.
இது வேறு உலகம்!
சொல்லப் போனால் இந்த உலகத்திலேயே இல்லாத ஒரு மாயாஜாலம், மந்திரம், தந்திரம் நிறைந்த சுவாரஷ்யமான புது உலகம்.
டைட்டில் போட ஆரம்பித்த உடனேயே சில மேப்புகளைக் காட்டி கதையை பின்னணி இசையோடு சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.
அதைத்தாண்டி அடுத்த சில காட்சிகள் ‘பாகுபலி’யை நினைவுபடுத்தவும் நமக்கு பகீர் என்கிறது. நல்லவேளையாக சில நிமிடங்களில் கதையின் போக்கு வேறு பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.
இந்தப்படம் முழுக்க முழுக்க இந்த விடுமுறை தினங்களில் குழந்தைகளை குஷிபடுத்த வேண்டுமென்பதற்காகவே எடுத்திருக்கிறார்கள்.
சரி கதைக்குள் வருவோம்!
வேதாளக் கோட்டையில் ராணியாக இருக்கும் ஸ்ரீதேவி பெயருக்குத் தான் ராணி. ஆனால் நாட்டை தன் சுண்டு விரலின் பிடியில் வைத்திருப்பவர் தளபதி சுதீப் தான்.
மகாராணியை மயக்கி அவரது கணவரான விஜயகுமாரை நாட்டை விட்டே வெளியேற்றி விட்டு, சுத்துபத்தில் இருக்கிற மொத்த கிராமத்து மக்களையும் தன் கட்டுக்குள் வைத்து கொடூர ஆட்சி நடத்துகிறான்.
அந்த வேதாளக் கோட்டைக்கு அருகில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் இருப்பவர் தான் பிரபு. ஒருநாள் ஆற்றோரம் குழந்தை ஒன்று தண்ணீரில் மிதந்து வர ( இதுதான் பாகுபலி எபெக்ட்) அவரை தனது மகனாக எடுத்து வளர்க்கிறார். அவர் தான் விஜய். அதே கிராமத்தில் இருக்கும் ஸ்ருதிஹாசனையும் காதலிக்கிறார்.
ஒருநாள் வழக்கம் போல மக்களை சித்திரவதை செய்ய வரும் வேதாளக் கோட்டை வீரர் கூட்டங்கள் வந்த இடத்தில் ஸ்ருதிஹாசனையும் தங்கள் கோட்டைக்கு கடத்திக் கொண்டு போய் விடுகிறார்கள்.
பின்னர் தனது காதலியை வேதாளக்கோட்டையிலிருந்து மீட்டுக்கொண்டு வர கிளம்புகிறார் விஜய்.
ஸ்ருதிஹாசனை அவர் மீட்டாரா? எதற்காக ஸ்ருதிஹாசனை அவர்கள் கடத்திக் கொண்டு போகிறார்கள்? என்கிற சொற்ப கேள்விகளுக்கு பதிலாக அமைகிறது கிளைமாக்ஸ்.
இதுவரை ஆக்ஷன் ஹீரோவாகவே பார்த்து ரசித்த விஜய்யை இதில் சரித்திர கால வீரனாக கம்பீரமாக பார்க்கலாம். குதிரையில் அசால்ட்டாக ஏறுவதும், வாள் வீசுவதில் உள்ள வேகமும் என விஜய்யின் உழைப்பு ரெகுலர் ஆக்ஷன், டான்ஸுடன் கூடுதலாக சேர்ந்து களைகட்டுகிறது.
முதல் பாதியில் தம்பி ராமையாவுடன் அவர் செய்யும் சின்னச் சின்ன குறும்புத் தனங்களும், சேட்டைகளும் ரசிக்க வைப்பவை.
ஸ்ருதிஹாசன், ஹன்ஷிகா என்று இரண்டு முன்னணி கதாநாயகிகள் இருந்தும் கதை என்னவோ விஜய்யை சுற்றியே வருவதால் அவர்களுக்கான இடம் சொற்பம் தான். அந்த சொற்ப இடத்தையும் டூயட் பாடல்களால் நிரப்பி ரசிகர்களை கவர்ச்சியில் திக்கு முக்காட வைக்கிறார்கள்.
வளர்ப்பு தந்தையாக வரும் பிரபு கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். வேதாளக்கோட்டையின் மகாராணியாக வரும் ஸ்ரீதேவி விழிகளே வால் வீசும் பார்வை. கிளைமாக்ஸில் விஜய்யுடன் அவர் போடும் வால் சண்டையில் அப்படி ஒரு ஆக்ரோஷம்.
தளபதியாக வரும் சுதீப் கம்பீர வில்லனாக வந்தாலும் அவர் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போவது அந்தோ பரிதாபம்!
சித்திரக் குள்ளர்களாக வரும் ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, வித்யூ ராமன் ஆகியோரை குரலை வைத்துத்தான் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது, இந்த மூவர் கூட்டணியை வைத்து இன்னும் கொஞ்சம் காமெடி செய்திருக்கலாம்.
வேதாளக்கோட்டையைச் சேர்ந்த வீரர்களுடன் சண்டை போடும் போதெல்லாம் இந்த வேதாளக்கூட்டங்களோட இம்சை தாங்க முடியல… என்று விஜய் பேசும் வசங்கள் ரசிகர்களிடையே கைதட்டல்களை அள்ளுகிறது. இப்படி கலாய்ப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா அஜித் படத்துக்கு ‘வேதாளம்’ங்கிற டைட்டிலே வெச்சிருக்க மாட்டாய்ங்க…!!!
நட்ராஜின் ஒளிப்பதிவில் குருவி கூட மிக அழகாகத் தெரிகிறது. பச்சை பசேல் என்கிற மனதுக்கு சுகத்தைத் தரும் ஒளிப்பதிவு படம் முழுக்க வைத்திருக்கிறது ப்ரெஸ்னஸ்! அவருடைய ஒளிப்பதிவில் கலை இயக்குநர் முத்துராஜின் உழைப்பையும் கண்கூடாகக் காண முடிகிறது.
பின்னணி இசையில் மிரட்டியிருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களில் ‘ஏண்டி… ஏண்டி…’, ‘ஜிங்கிலி ஜிங்கிலி’ பாடல்களைத் தவிர மற்ற பாடல்களில் கவர தவறியிருக்கிறார்.
ஃபேண்டஸி படம் எடுப்பதில் எப்போதுமே அலாதிப் பிரியம் கொண்டவர் இயக்குநர் சிம்பு தேவன். இதில் சித்திரக் குள்ளர்கள், வழிகாட்டும் பேசும் ஆமை, வேதாளக்கோட்டை, கருஞ்சிறுத்தை, பேசும் குருவி, ஒற்றைக்கண் மனிதன் என வெளிப்படுத்தியிருக்கும் அத்தனை ரசனைகளும் குழந்தைகளுக்கானது.
பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுக்கு கிடைக்காத பாக்கியம் விஜய்க்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அதுதான் குழந்தைகளையும் ரசிகர்களாக பெற்றிருப்பது!
ஆகவே ரசனையுள்ள ரசிகர்கள் ‘புலி’யைப் பார்க்கக் கிளம்பினால் கூடவே தங்கள் வீட்டுக் குழந்தைகள் அல்லது அக்கா, தங்கை, சித்தி, சித்தப்பா என சொந்த பந்தங்களின் குழந்தைகளோடு பார்க்கச் செல்லுங்கள். ஏனென்றால் இந்தப் ‘புலி’ – குழந்தைகளுக்கான ஃபேண்டஸி உலகம்!