பிரபலங்கள் என்ன பேசினாலும் பிரச்சனையாகி விடுவது வழக்கம் தான். அதனால் தான் வார்த்தைகளை விடும் போது எச்சரிக்கையாக விட வேண்டும்.
நேற்று முன் தினம் நடிகர் ராகவா லாரன்ஸ் இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டார்.
அதாவது அனிதா விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசை அவர் விமர்சித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. ஆனால் தான் அப்படிச் சொல்லவில்லை என்றும் தயவு செய்து நான் பேசியதை அரசியலாக்காதீர்கள்… என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :
நேற்று எனது முனி 4 படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன். தரிசனம் முடித்து வரும் போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள்
சிலர் அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்கள். கோயில் திறந்து ஒரு மண்டலம் முடிந்தது பற்றி சொன்னேன்.
நீட் விவகாரம் பற்றி கேட்டார்கள் … நானும் ” காலம் பதில் சொல்லும் ” என்று ஒற்றை வரியில் பதில் சொன்னேன்.
ஆனால் வெளியிடப்பட்ட செய்தியில் ”பா.ஜ.கா வுக்கு காலம் பதில் சொல்லும்” என்று நான் சொன்னதாக வெளியிட்டுள்ளார்கள்..
சேவையும் ஆன்மீகமும் தான் எனக்கு பிடித்த விஷயம்.. அரசியல் அல்ல, அப்படி இருக்க நான் எப்படி பி.ஜே.பி பெயரை குறிப்பிடுவேன். என்றவரிடம் அனிதா குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி கொடுத்தீர்களா ? என்றும் கேட்டார்கள். அது கடவுளுக்கும் எனக்கும் அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும் என்று சொன்னேன். தயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள்
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார்.