RATING : 3.5/5
முதல் பாதியில் எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ஆ’ நாவலையும், இடைவேளைக்குப் பிறகான ஏரியாவை தன்னுடைய சொந்தக் கற்பனையாகவும் திரையில் கொண்டு வந்து அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி திகில் ஜாலம் காட்டியிருக்கும் படம் தான் இந்த ‘சைத்தான்’.
சென்னையில இருக்கிற சாப்ட்வேர் கம்பெனியில் விஜய் ஆண்டனி தான் கிங். எவ்ளோ பெரிய கம்ப்யூட்டர் ப்ராப்ளம்னாலும் அசால்ட்டா சால்வ் பண்ணிடுவார். அப்படிப்பட்ட மூளைக்காரருக்கு கல்யாணம் முடிஞ்ச சந்தோஷத்தை சில நாட்கள் கூட தராம மூளைக்குள்ள எப்பவுமே ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருக்கு. அதோட விட்டுச்சா? ”அந்தா எதிர்த்தாப்ல வர்ற பஸ்ல அடிபட்டு செத்துப்போயிடு”ன்னு அந்தக்குரல் சொன்னா எப்படி திக்கு திக்குன்னு இருக்கும்?
அந்தக் குரல் தரும் பேரிம்சையால் தனது நண்பனை விபத்து ஒன்றில் இழந்து விட்டு குற்ற உணர்ச்சியில் இருக்கும் அவரை பாஸ் ஒய்.ஜி.மகேந்திரன் மனோதத்துவ டாக்டரான கிட்டியிடம் கூட்டிச் செல்கிறார்.
அவர் ஹிப்னாடிஸம் முறையில் விஜய் ஆண்டனியை இன்னும் பின்னால போங்க, இன்னும் பின்னால போங்க என்று போக வைக்க தஞ்சாவூர் பேக்ட்ராப்பில் ஒரு ப்ளாஷ்பேக் விரிகிறது.
அங்கே சர்மா – ஜெயலட்சுமி என இரண்டு கேரக்டர்களை கதை சுற்றி வர, அந்த கேரக்டர்களுக்கும் நிகழ்கால விஜய் ஆண்டனியும் அவரது மனைவியுமான ஹீரோயின் அருந்ததி நாயருக்கும் தொடர்பை ஏற்படுத்த என்ன நடக்கிறது? மூளைக்குள் கேட்கும் குரல் இம்சைகளிலிருந்து விஜய் ஆண்டனி விடுபட்டாரா? இல்லையா? என்பதே தடதடக்கும் கிளைமாக்ஸ்.
தன்னுடைய உடல் மொழிகளுக்கேற்ப என்ன கதை செட்டாகுமோ? அப்படிப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் சூட்சமம் தெரிந்தவர் விஜய் ஆண்டனி. அந்த வகையில் இந்தப்படத்தின் கதையும் கேரக்டரும் அவருடைய உடல்மொழிகளுக்கு மிகச்சரியாக பொருந்தியிருக்கிறது. தனது இந்த நிலைக்கு காரணமே தன் மனைவி தான் என்று தெரிந்தும் அருந்ததி மீது கோபம் கொள்ளாமல் பாசம் காட்டுவது நெகிழ்வான தருணங்கள். சீரியஸாகப் போகும் கிளைமாக்ஸில் ஒன்றரை டன் வெயிட்டாக வில்லன் கோஷ்டிகளை புரட்டியெடுக்கிற காட்சியில் தனது ஹீரோயிஸத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறார் விஜய் ஆண்டனி.
தஞ்சாவூரிலுள்ள நூலகத்தில் சாருஹாசன் கொடுக்கும் அந்த பழைய போட்டோ ஒன்றை விஜய் ஆண்டனி கையில் வாங்கிப் பார்க்கையில் அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கே பயங்கர ஷாக். அந்த இடத்தில் செம டைமிங்க்கான இண்டர்வெல்.
நாயகியாக வரும் அருந்ததி நாயர் கேரள வரவு. ஆனால் மனுஷி பெங்களூர் தக்காளி போல தளதளவென்று காட்சி தருகிறார். முதல் பாதியில் கட்டிய கணவர் மீது அவ்வளவு அன்பு வைத்திருப்பவரின் ப்ளாஷ்பேக் மற்றும் இரண்டாம் பாதி காட்சிகளாக நகரும் போது அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு பகீர்!
விஜய் ஆண்டனியின் ஐடி கம்பெனி நண்பராக வருகிறார் ஆடுகளம் முருகதாஸ். வேறு ஸ்மார்ட்டான ஆள் கிடைக்கவில்லையா டைரக்டர் சார்?
கிட்டி, மீரா கிருஷ்ணன், ஓய்.ஜி.மகேந்திரன், அந்த குள்ளமான வார்டு பாய் என திகில் கதைக்கு தோதான சரியான கேரக்டர் தேர்வு!
இதுபோன்ற சைக்காலஜி த்ரில்லர் கதைக்கு பின்னணி இசை தான் படத்தின் வேகத்தை கூட்டும் கீ. அந்தக் கீபோர்டை காட்சிகளுக்கேற்ப மிகச்சரியாக இசைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. பாடல்களில் ஜெயலட்சுமீஈஈஈஈஈஈஈ…. திகில் த்ரில்.
ஒவ்வொரு பிரேமிலும் துடைத்து வைத்தாற்போல ப்ரெஷ்ஷான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் பிரதீப் கலிபுரயத்.
சுஜாதா நாவலில் இருக்கிற விறுவிறுப்பும் வேகமும் படத்தின் முதல் பாதியில் பக்காவாக செட்டாகியிருக்கிறது. இடைவேளைக்குப் பின்பாக நகரும் காட்சிகள் தான் திக்குத் தெரியாக காட்டில் இறக்கி விட்ட கதையாக தட்டுத் தடுமாறுகிறது. குழப்பத்தோடு நீளுகிற அந்தக் காட்சிகளின் சில இடங்களில் கத்தரி போட்டிருந்தால் சைத்தானின் பலம் இன்னும் பல மடங்கு கூடியிருக்கும்!