சூரரைப்போற்று நிச்சயம் சூர்யா கரியரில் மிக முக்கியமான படம். ஒரு சாமானியன் பெரும் சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அவன் எத்தகைய இன்னல்களை கடக்க வேண்டியதிருக்கும் என்பதைச் சொல்லியதோடு..எட்டாத வெற்றியென இங்கு எதுவுமே இல்லை என்பதையும் கெத்தாகச் சொல்லியுள்ளது சூரரைப்போற்று.
படத்தில் சூர்யா எளிய மக்களுக்கான விமான சேவையை ஏன் துவங்க முடிவெடுக்கிறார் என்ற காரணத்தை மிகச்சரியாக பதிய வைத்துவிட்டதால் படம் எங்கும் சூர்யா வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் பலமாக மனதில் பதிந்து விடுகிறது. இதுதான் படத்தின் பெரும் சக்ஸஸ். ரயில் நின்று போக போராட வேண்டிய சூழலில் உள்ள கிராமத்தில் பிறந்த ஒருவன் விமான சேவை துவங்கி விண்ணில் பறக்கும் கதை.
தனக்காக கதையில் வளைவு சுளிவுகளை ஏற்படுத்தும் மாஸ் ஹீரோக்களுக்கு மத்தியில் கதைக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டு மாஸ் காட்டியிருக்கிறார் நடிகர் சூர்யா. அவருக்கு நிகராக படத்தில் மனதில் பதிந்துவிடுகிறார் அபர்ணா பாலமுரளி. ஒவ்வொரு கணவனும் வெற்றிபெற இப்படி ஒரு மனைவி தேவை என்ற எண்ணத்தைத் தோன்ற வைத்துவிடுகிறது அபர்ணா பாலமுரளியின் மெச்சூட் நடிப்பு. சூர்யா அபர்ணா பாலமுரளி கெமிஸ்ட்ரி நல்ல மிஸ்ட்ரி. படத்தில் பங்குபெற்றுள்ள ஏனைய கேரக்டர்களில் காளிவெங்கட், ஊர்வசி, பூ ராமு எல்லாம் தரமான தேர்வு. கருணாஸ் விவேக் பிரசன்னா உள்பட யாருமே குறையில்லாத நடிப்பு. ஒவ்வொரு கேரக்டர்களுக்காக எழுதப்பட்டிருக்கும் ரைட்டிங்கும் சிறப்பு.
எளியவனாய் இருந்து உயர்ந்தவன் கூட மேல் ஏறிய பின் தான் வந்த வழியில் வேறு எவனும் வரக்கூடாது என்றே நினைக்கிறான். வந்த பாதையை மறப்பதே தவறு என்றால் அதை அடுத்தவர்களுக்கு தெரியாமல் மறப்பதும் மகா தவறு. அப்படியான தவறுகள் தான் படத்தில் சூர்யாவை இயங்க விடாமல் செய்கிறது. அதை ஒரு எளியவனுக்கான வலி அழுகை கோபம் புத்திசாலித்தனம் என எல்லா உணர்வுகளோடும் கடந்து இலக்கை அடைகிறார் சூர்யா. படத்தில் எங்கேயும் அதிகப்பிரசங்கித் தனமான காட்சியமைப்புகள் இல்லை. வசனங்களும் சுருக்கமாகவும் நறுக்கெனவும் எழுதப்பட்டுள்ளது.
ஜீவி பிரகாஷின் பின்னணி இசை பாடல்கள் இரண்டுமே படத்திற்கு பெரும்பலம். படத்தின் டெக்கனிக்கல் விசயங்களில் எதிலுமே குறையில்லை.
சுயமரியாதை திருமணம், ஆனால் இந்து முறை வழக்கப்படி சீமந்தம்? என்னதான் பயோபிக் சினிமாவாக இருந்தாலும் சில இடங்களில் பக்கா சினிமாத்தனம் எட்டிப் பார்ப்பதும் சின்ன குறை. கிராம மக்கள் ஒன்றிணைந்து சூர்யாவிற்கு உதவும் இடத்தில் சற்று கத்திபடம் நினைவில் வந்து போகிறது. இவையெல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொரி என்பது போல சிறுகுறையே…
படம் நமக்குள் பாய்ச்சும் ஒரு பாசிட்டிவ் சிந்தனைக்காக நிச்சயம் சூரரைப்போற்று கொண்டாடப்பட வேண்டியது
4/5