தங்கலான்- விமர்சனம்

நில உரிமை கோரும் மற்றொரு பா.ரஞ்சித் சினிமா

1850 கால கட்டங்களில் வட ஆற்காடு மாவட்டத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பெரும் குடைச்சல் தருகிறார் ஜமீன் ஒருவர். எளியவர்களின் நிலங்களை வளைத்துப் போடுவதோடு அவர்களை அடிமையாகவும் ஆக்குகிறார். இந்நிலையில் , ‘அங்கு ஒரு நிலத்தில் தங்கம் இருக்கிறது’ என பிரிட்டிஷ் அதிகாரி விக்ரமை அழைத்துச் செல்கிறார். ‘வெள்ளைக்காரனுக்கு தங்கம் எடுத்துக்கொடுத்தால் தங்கள் பிரச்சனை தீரும்’ என தங்கலான் நம்புகிறார். அவரின் நம்பிக்கை எளிய மக்களை காத்ததா? என்பதே படத்தின் கதை

விக்ரம் என்ற மகா கலைஞன் தன் உடல், பொருள், ஆவி என சகலத்தையும் இந்தப் படத்திற்குள் செலுத்தியுள்ளார். மிகப்பெரிய மெனக்கெடலுடன் கூடிய நடிப்பால் நம்மை அசர வைக்கிறார். அவரை ஓரம் கட்ட வந்தவர் போல அபார நடிப்பை கொடுத்துள்ளார் பார்வதி. என்னவொரு உடல்மொழி!! பசுபதி தனக்கென்று ஒரு கணக்கு வைத்து நடித்துள்ளார். அவரின் கேரக்டர் வடிவமும் சிறப்பு. மாளவிகா மோகனன் சூனியக்காரியாக வந்து மனதில் மாயம் செய்கிறார். ஏனைய கேரக்டர்ஸ் யாரும் சோடை போகவில்லை. ஹரி கிருஷ்ணன் நடிப்பும், விக்ரம் மகனாக வரும் இளைஞரின் நடிப்பும் ஆகத்தரம். காஸ்டிங்கிலே படம் நல்ல மெச்சூட் லெவலுக்கு வந்துவிடுகிறது

கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு தங்கலானை மின்ன வைக்கிறது. குறிப்பாக ஒரு சண்டைக்காட்சியில் மாறி மாறி வரும் லைட்டிங்ஸ் அசத்தல் ரகம். ஜி.வி பிரகாஷ் மினிக்கி பாடலில் தாளம் போட வைக்கிறார்.பின்னணி இசை அதீத சத்தங்களால் இயல்பை மீறுகிறது. சிஜி டீம் இன்னும் பெட்டராக உழைத்திருக்கலாம்

கதையாக தனது வழக்கமான அரசியல் விஷயத்தைத் தொட்ட பா.ரஞ்சித், திரைக்கதைக்கு பெரிதாக மெனக்கெடாதது வருத்தமளிக்கிறது. நிறைய காட்சிகள் சிறப்பாக இருக்கிறது தான். ஆனால் அவற்றோடு நாம் எமோஷ்னலாக கனெக்ட் ஆகவே முடியவில்லை. இத்தகைய பிரமாண்ட பட்ஜெட் கிடைத்தும், அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர்கள் கிடைத்தும் ரஞ்சித் சறுக்கியுள்ளது நமது சாபம். இடைவேளைக்குப் பிறகு ஒரு பதினைந்து நிமிட படம் இருக்கிறது. அதை அவசியம் காண வேண்டும். அந்தக் காட்சிகள் தரும் உணர்விற்காகவே தங்கலானை நாம் உச்சி முகரலாம்
3/5

Actor vikramDirector Pa RanjithThangalaan movie