தங்க ரதம் – விமர்சனம்

RATING 2.5/5

முழுக்க முழுக்க காய்கறி மார்க்கெட் பின்னணியில் படமாக்கப்பட்டிருக்கும் படம் தான் இந்த ”தங்க ரதம்.”

தன்னுடைய பெரியப்பா ”ஆடுகளம்” நரேனின் வண்டியை வைத்து ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி லோடு இறக்கும் தொழிலைச் செய்பவர் ஹீரோ வெற்றி. அவருக்கும் அதே தொழிலை அதே மார்க்கெட்டில் செய்யும் செளந்தர் ராஜாவுக்கும் யார் முதலில் லோடை மார்க்கெட்டில் இறக்குவது என்பது தொடர்பாக அடிக்கடி மோதல் வருகிறது.

இந்த மோதலுக்கு நடுவே செளந்தர் ராஜாவின் தங்கையான நாயகி அதிதியை காதலிக்கத் தொடங்குகிறார் ஹீரோ வெற்றி. இந்த விஷயம் அவரது பெரியப்பா நரேனுக்கு தெரியாமல் போனாலும் அதிதியின் அண்ணனான செளந்தர் ராஜாவுக்கு தெரிய வருகிறது.

இதனால் வெற்றியை பழி வாங்க காத்துக் கொண்டிருக்கும் செளந்தர் ராஜாவின் வண்டியின் கண்ணாடியை ஏற்கனவே அவருடன் பகையோடு இருக்கும் மொட்டை ராஜேந்திரன் உடைத்து விடுகிறார்.

இதை வெற்றி தான் செய்திருப்பார் என்று நம்பும் செளந்தர் ராஜா வெற்றியை பழி வாங்கத் துடிக்கிறார். அதிலிருந்து தப்பிக்க பெரியப்பா நரேனின் ஆலோசனையின் படி வெற்றி வேறு ஊருக்கு சென்று விடுகிறார்.

அதோடு வெற்றிக்கும், அதிதிக்கும் உள்ள காதல் விவகாரம் தெரியாமல் வெற்றி – செளந்தர் ராஜா மோதலுக்கு முடிவு கட்டும் விதமாக தனது சொந்த மகனுக்கு அதிதியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் நரேன்.

இந்த விஷயம் வெற்றிக்குத் தெரிய வரவும் அவர் என்ன செய்கிறார்? என்பதே கிளைமாக்ஸ்.

ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் வெற்றி நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். வளர்த்தவருக்கும் துரோகம் செய்ய முடியாமல், தன் காதலியையும் விட முடியாமல் அவர் தவிக்கும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நடிப்பு தேவை மச்சான் என்று சொல்ல வைக்கிறார். ஆனாலும் இது முதல் படமென்பதால் தட்டிக்கொடுக்கலாம்.

வில்லத்தனம் கலந்த இரண்டாவது ஹீரோ லெவலில் வரும் செளந்தர் ராஜா அந்த கேரக்டருக்குரிய நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை.

நாயகி அதிதி கிருஷ்ணா சின்னப் பெண் போல பாவாடை தாவணியில் அழகோ அழகு. காதல், நெகிழ்வு இரண்டையும் முகத்தில் மிச்சமில்லாமல் பிரதிபலிக்கிறார்.

‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ சாமிநாதன் ஆகியோரின் காமெடியை கண் கொட்டாமல் சிரித்து ரசிக்கலாம்.

டோனி பிரிட்டோவின் மென்மையான பின்னணி இசையோடு, ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை நம் கண் முன்னே கொண்டு வருகிறது.

காய்கறி மார்க்கெட் பின்னணியின் ஒரு முழு நீளப்படத்தை காதல், மோதல், ஃபேமிலி செண்டிமெண்ட் என தமிழ்சினிமா ரசிகர்களுக்கு பழக்கப்பட்ட பாணியில் படத்தை இயக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் பாலமுருகன்.

லோடு வண்டியில் ஆங்காங்கே ”பட்டி டிங்கரிங்” பார்த்திருந்தால் டைட்டிலைப் போலவே படம் ”தங்க ரதம்” ஆகியிருக்கும்!

Aadukalam NarenAdithi KrishnaBalamuruganJacob RathinraajRajendranSuresh UrsThangarathamThangaratham Movie ReviewThangaratham ReviewTony BrittoVettrii
Comments (0)
Add Comment