தீரன் அதிகாரம் ஒன்று – விமர்சனம்

RATING : 3/5

நட்சத்திரங்கள் – கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர்

இயக்கம் – ஹெச். வினோத்

வகை – ஆக்‌ஷன், கிரைம், த்ரில்லர்

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 41 நிமிஷம்

காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு வீடு புகுந்து கொள்ளையடிக்கும் வட இந்திய கொள்ளைக் காரக் கூட்டத்தை பிடித்தே ஆக வேண்டும் என்கிற வெறியோடு கிளம்பும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் பயணத்தில் அவர் சந்திக்கும் பிரச்சனைகளும், சவால்களும் தான் இந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று.’

பவாரியா கிரிமினல்கள் தமிழகத்தில் 24 கொலைகள் செய்து கொள்ளையடித்த ஆபத்தான கேங். இந்தியா முழுவதும் பவாரியா கேங் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

டி.ஜி.பி ஜாங்கிட் அவர்கள் தலைமையிலான போலீஸ் படை பவாரியா கேங்கில் உள்ள 13 கிரிமினல்களை வட இந்தியா சென்று 2006-ல் கைது செய்து, அந்த கேங்கின் இரு லீடர்களை உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் சுட்டு கொன்றது. பவாரியா கும்பலின் கொடூர குற்றச் செயல்களில் இருந்து தமிழகம் காப்பாற்றப்பட்டது.

இந்த டி.ஜி.பி ஜாங்கிட் ஐபிஎஸ் அவர்களின் “பவாரியா ஆபரேஷனை” அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் இது.

எத்தனையோ காக்கி சம்பந்தப்பட்ட படங்களை தமிழ்சினிமாவில் பார்த்திருக்கிறோம், ஆனால் இது அந்த ரெகுலர் லிஸ்ட்டில் சேருகிற பத்தோடு பதினொன்று படமாக இல்லாமல் நிஜத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை கதையாக்கி யதார்த்தமாகவும், ஏகப்பட்ட விபரங்களுடன் ஆக்‌ஷன் பிளஸ் மாஸ் படமாகத் தந்திருக்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத்.

காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியில் சேரும் கார்த்தி நேர்மையான போலீஸ் அதிகாரி, அந்த நேர்மைக்காகவே அவரை அரசு பல இடங்களுக்கு இடமாற்றம் செய்கிறது.

அப்படி ஒருமுறை பொன்னேரிக்கு மாற்றம் செய்யப்படும் போது, அங்கு மிகக் கொடூரமான முறையில் ஒரு கொலை – கொள்ளை சம்பவம் நடக்கிறது. அதனை விசாரிக்க ஆரம்பிக்கும் தீரனுக்கு, அதுபோலவே பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்திருப்பது தெரிய வருகிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபடும் கும்பல் யார்? என்பதை விசாரணையை ஆரம்பிக்கிறார் தீரன். வட இந்தியாவைச் சேர்ந்த குற்றக் கும்பல் ஒன்றுதான் இந்தக் கொடூரச் செயல்களில் ஈடுபடுவது தெரிய வருகிறது. இருந்தாலும் அங்கு அதிக பலத்துடன் இருக்கும் அவர்களைப் பிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.

இதற்கிடையில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் அதே கும்பலால் கொல்லப்பட, பிரச்சனை தீவிரமடைகிறது. இனி அந்தக் கும்பலால் ஒரு உயிர் கூட போய் விடக்கூடாது என்று முடிவெடுத்து வெறியோடு கிளம்புகிறார் கார்த்தி.

தனது தேடுதல் வேட்டையில் சம்பந்தப்பட்ட கொள்ளைக் கூட்டத்தை கார்த்தி கண்டுபிடித்து சட்டத்தின் முன் அவர்களை நிறுத்தினாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

ஒரு கொலை சம்பவம், அதைச் செய்தது யார் என்கிற மாதிரியான வழக்கமான போலீஸ் டெம்ப்ளேட்டிலிருந்து முற்றிலும் விலகி வட மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல், அதைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதும், துப்பு கிடைத்தும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் போவது, பின்பு எப்படியாவது அந்தக் கும்பலை பிடித்தே தீருவது என்கிற வேகத்துடன்

இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று விசாரணையை முடிக்கி விடுவது என ஒரு துப்பறியும் படத்துக்குரிய விறுவிறுப்புடன், சீட்டு நுனிக்கு வர வைக்கும் விதமான காட்சியமைப்புகளுடன் நகர்கிறது படம்.

ஹீரோவாக வரும் கார்த்தி அவரது அண்ணன் சூர்யா மாதிரி பெரிய முறுக்கு மீசை, எப்போதுமே விரைத்தபடி நடப்பது என செயற்கையாக இல்லாமல் நாம் சாதாரணமாகப் பார்க்கும் ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருப்பாரோ? அப்படியே வருகிறார்.

ஒரு பக்கம் கோமா ஸ்டேஜில் இருக்கும் அன்பான மனைவியை பார்க்கச் செல்வதா? அல்லது அந்தக் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்கச் செல்வதா? என்கிற நிலை வரும் போது மனைவியை விட மக்களின் உயிர்கள் தான் முக்கியம் என்று கிளம்புகிறவர் அதற்காக வட மாநிலங்களில் வெயில் கொளுத்தும் ஏரியாக்களில் நடந்தே செல்வதும், ராஜஸ்தான் போன்ற பாலைவனங்களில் களைப்படையும் வரை செல்வதுமாக படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார். அவருடைய உழைப்பு படம் முழுவதிலும் கைதட்டி பாராட்டுகிற அளவுக்கு வெளிப்பட்டிருக்கிறது. கார்த்தின் ஹிட் லிஸ்ட்டில் இன்னொருபடம் இது என்றும் சொல்லலாம்.

இது போன்ற கதைகளின் ஹீரோயின் என்கிற கேரக்டர் இடைச்செறுகல் ரகம் தான். ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங் உடனான ரொமான்ஸ் காட்சிகள், பாடல்கள் எல்லாமே படத்தின் விறுவிறுப்புக்கு பெரும் வேகத்தடையாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

வெறுமனே ஒரு கொள்ளைக் கூட்டம் என்றளவில் மட்டும் கதையை விவரிக்காமல் அவர்கள் முகலாயர் காலத்தில் குற்றம் செய்த பரம்பரையைச் சேர்ந்த கூட்டமென்று அந்த வரலாற்று விபரங்களையும் ஒரு ஓவியம் மாதிரி சில நிமிடங்களில் காட்சிப்படுத்தி அந்த குற்றப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இந்த “பவாரியா” கொள்ளைக் கும்பல் என்று திரைக்கதையை மிகவும் நுட்பமாக எழுதியிருப்பதோடு அதை அப்படியே திரையில் காட்சிகளாகவும் வேகம் குறையாமல் காட்டியிருப்பது கூடுதல் சிறப்பு.

ஜிப்ரானின் ‘பரபர’ பின்னணி இசையும், பாலைவனப் பகுதிகளையும், அடர்ந்த காட்டுப் பகுதிகளை உள்ளது உள்ளபடியே காட்டும் சத்தியன் சூரியனின் ஒளிப்பதிவும் கூடுதல் பலம்.

இரக்கமே இல்லாமல் கொடூரக் கொலைகளைச் செய்யும் இப்படிப்பட்ட கொள்ளைக் கூட்டத்தைப் பிடித்த போலீஸ் அதிகாரிகளுக்கு அரசு எந்த விருதும் வழங்கவில்லை, பதவி உயர்வும் வழங்காமல் அவர்களை ஒரு டம்மி பதவியில் தூக்கியடிக்கப்பட்டார்கள் என்கிற உண்மையையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத்.

அதே சமயத்தில் போலீசே நுழைய முடியாத கிராமமாக காட்டப்படுகிற அந்த ஊரில் உள்ள மக்களுக்கு இந்த அரசாங்கம் என்ன உதவிகளைச் செய்தது? என்கிற கேள்வியும் எழுகிறது.

எப்போதுமே எந்த வித நாகரீகமும் பழகாத அல்லது பழக விரும்பாத ‘பவாரியா’ சமூகம் போன்ற தாழ்த்தப்பட்ட, மலைப்பிரதேச பழங்குடியின மக்களை திருட்டுப் பட்டம் கட்டியோ, அல்லது கொலைகாரர் பட்டம் கட்டியோ அவர்களை அழிக்கிற வேலையை அரசு இயந்திரம் மிக நுட்பமாகச் செய்யும். அந்த உண்மை தான் இந்தப்படத்தில் நாம் உற்று நோக்க வேண்டியது.

அப்படிப்பட்ட உண்மையை படம் பார்க்கிற ரசிகன் மறந்து போகும் விதமாக விளிம்பு நிலை மனிதர்களுக்கு எதிராக போலீஸ் செய்யும் கொடூரச் செயல்களை மறக்கடிக்கும் விதத்தில் திருட்டுச் செயலைச் செய்கிறவர்கள் மிகக் கொடூரமானவர்கள், அதற்காக அவர்களுக்கு கிடைக்கிற தண்டனை சரிதான் என்று ரசிகர்களை மாற்றிப் பேச வைத்த விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ஹெச். வினோத்.

GhibranH.VinothKarthiMovie ReviewRakul Preet SinghTheeran Adhigaaram OndruTheeran Adhigaaram Ondru Movie ReviewTheeran Adhigaaram Ondru Review
Comments (0)
Add Comment