உப்பு கருவாடு – விமர்சனம்

Rating : 3.8/5

ழகிய தீயே, மொழி, பயணம் போன்ற படங்களைத் தந்த ராதாமோகனின் இயக்கம் எப்படி இருக்கும் என்பதற்கு நாம் புதிதாக எந்த சர்ட்டிபிகேட்டும் கொடுக்கத் தேவையில்லை.

அவர் ஒரு படத்தை ஆரம்பிக்கிறார் என்றால் ஆரம்பிக்கும் போதே அதற்கு சென்சாரில் ‘யு’ சர்ட்டிபிகேட் தான் கிடைக்கும் என்று அடித்துச் சொல்லலாம்.

சமகால மனிதர்களின் வாழ்வியலோடு பிண்ணிப்பினைந்த திரைக்கதையும், வீரியமிக்க வசனங்களும் அவருடைய படங்களை ஆண்டுகள் பல கடந்தாலும் உயிர்ப்புள்ளவையாக வைக்கும்.

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விஷயத்தை அழகாகவும், அதே சமயத்தில் ஆணித்தரமாகவும் சொல்லுவார்.

பயணம் படத்திற்குப் பிறகு ராதாமோகனின் இயக்கத்தில் வந்திருக்கும் படம் இந்த ‘உப்புக் கருவாடு’.

டைட்டில் தான் தர லோக்கல். ஆனால் கதை என்னவோ சினிமாவைப் பற்றித்தான் பேசுகிறது.

110 ரூபாய் டிக்கெட் கொடுத்து ஒரு படத்தை பார்த்து விட்டு தியேட்டரை விட்டு நகரும் ரசிகன் ஒரே வார்த்தையில் தனது விமர்சனத்தை சொல்லி விடுகிறான். அது நல்லதோ கெட்டதோ ஆனால் அந்தப் பட வாய்ப்பைப் பெறுவதற்கு ஒரு இயக்குநர் எந்தளவுக்கு வலிகளையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார்.

சினிமாவைத் தவிர எதுவும் தெரியாத இயக்குநர் கருணாகரனுக்கு முதல் படம் தோல்வி, ரெண்டாவது படம் பாதியிலேயே நின்று விடுகிறது, கூடவே தனது இணை, துணை உதவி

இயக்குநர்களான சாம்ஸ், நாராயணனையும் வைத்துக் கொண்டு மூன்றாவது வாய்ப்பு தேடுபவருக்கு மேனேஜர் மயில்சாமி மூலமாக ஒரு தயாரிப்பாளர் கிடைக்கிறார்.

மீனவ குப்பத்தைச் சேர்ந்த தயாரிப்பாளரான எம்.எஸ்.பாஸ்கர் அவரது மகள் நந்திதாவை கதாநாயகியாக்க வேண்டும் என்பதுதான் கருணாகரணிடம் போடும் ஒரே ஒரு கண்டிஷன்.

ஊரில் தங்கைக்கு நிச்சயத்தார்த்தம் நடத்த மகனின் பண உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது?

மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் அந்த வாய்ப்பு தேடி வரவும் ஒப்புக்கொண்டு உதவிக்கு கூடுதலாக ‘டவுட்டு’ செந்திலையும் வைத்துக் கொண்டு படத்துக்கான வேலைகளை ஆரம்பிக்கிறார்.

நடிப்பென்றால் கிலோ என்னவிலை என்று கேட்கிற நந்திதாவுக்கு நடிப்புப் பயிற்சியெல்லாம் சொல்லிக்கொடுத்து படப்பிடிப்புக்கு தயாராகிற நேரத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது.

அந்த சம்பவத்தால் அடுத்தடுத்து நடப்பது என்ன? கருணாகரன் ஒரு இயக்குநராக வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

தொடர்ச்சியாக பல படங்களில் காமெடி நடிகராகவே பார்த்து விட்ட கருணாகரனை இதில் ஹீரோவாக்கியிருக்கிறார்கள். பட வாய்ப்பு தேடி அலையும் ஒரு இயக்குநரின் வலிகளையும், வேதனைகளையும் தான் யோசித்து வைத்திருக்கிற சீன்களுக்கு மற்றவர்கள் மறுத்து சீன் சொல்லும் போதும் இயக்குநர்களின் நிஜ உணர்வுகளை திரையில் காட்டியிருக்கிறார்.

உங்க அண்ணன் தம்பி பிரச்சனையில என்னோட வாழ்க்கையில விளையாடாதீங்க சார்… இது உங்களுக்கு விளையாட்டா இருக்கலாம். எனக்கு இது வாழ்க்கை. சினிமாவை விட்டா எனக்கு எதுவுமே தெரியாது. நாட்ல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு, அதையெல்லாம் விட்டுட்டு என்னோட வாழ்க்கை தான் உங்களுக்கு கெடைச்சதா..? என்று அவர் பேசும் நீண்ட வசனம் நெத்தியடி.

எதற்கெடுத்தாலும் சகுனம் பார்க்கும் மயில்சாமி ‘கேஸ் ட்ரபுள்’ சவுண்ட்டைக் கூட நல்ல சகுனமாகச் சொல்லும் காட்சி கலகலப்பு.

அதிலும் இந்த ‘டவுட்டு’ செந்தில் இருக்காரே..? ‘சமூகம்’ என்பதை ‘சண்முகம்’ என்று புரிந்து கொள்வதும், ‘கன்பியூஸ்’ என்ற வார்த்தையை இங்கிலீஷில் ‘கன்சீவ்’ என்று தப்பாகச் சொல்வதுமாக சீனுக்கு சீன் சிக்ஸர் அடிக்கிறார்! பேசுகிற எல்லா ஆங்கில வார்த்தையும் தப்பாகப் பேசி சிரிக்க வைக்கும் டவுட்டு செந்திலை பாடகர் வாய்ப்புக்காக பார்க்கிற இடங்களில் எல்லாம் துரத்தி வந்து ஒரு மலையாளப் பாடகர் பாடிக்காண்பிப்பதும், அதற்குஅவர் காட்டும் ஷாக்கிங் எக்ஸ்பிரஸனும் நல்ல டைம்பாஸ்…

நடிக்கத் தெரியாத நடிகையாக நந்திதா ஜமாய்க்கிறார் என்றால் எப்படி நடிக்க வேண்டும்? என்று அவருக்கு சொல்லிக் காட்டுகிற காட்சியில் சபாஷ் வாங்குகிறார் ‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதா.

சாமியாராக வரும் திண்டுக்கல் சரவணன் படத்தில் நடிப்பதற்காகச் செய்து பார்க்கும் எக்ஸ்பிரஷன்கள் அபாரம், குறிப்பாக மேஜர் சுந்தர்ராஜன் போல வசனம் பேசும்போது தியேட்டரில் நான் -ஸ்டாப் சிரிப்புச் சத்தம்.

என்னை என்றைக்குப் பாதிக்குதோ அன்றைக்குத்தான் நான் என்னை கவிஞன்னு ஒப்புக்கொள்வேன் என்று சொல்லிக்கொண்டே அவ்வப்போது எம்.எஸ்.பாஸ்கர் சொல்லும் கவிதைகள் கூட சிரிப்பு வெடிகள் தான்.

ஆரம்பத்தில் வில்லனாக வரும் இயக்குநர் மாரிமுத்து கிளைமாக்ஸில் நல்லவனாக மாறுவது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் டவுட்டு செந்திலிக்கும், நந்திதாவுக்கும் ஒரு கெமிஸ்ட் வைத்திருப்பார் பாருங்கள் அது தான் படத்தில் கணிக்க முடியாத ட்விஸ்ட்!

ஹீரோ ஆக வேண்டும் என்பதற்காக கேரக்டருக்காக உடலை கருப்பாக்கிறேன் என்று எப்போது பார்த்தாலும் வெயிலில் காய்வதும், வாய்ப்பு கிடைத்ததும் அவருடைய நடவடிக்கைகள் கொஞ்சம் மாறுவதும் இயல்பு.

மகேஷ் முத்துசாமியில் ஒளிப்பதிவில் காய்ந்து போன கருவாட்டைப் போலவே முழுப்படமும் ஒருவித வறட்சி தான் மெயின் டோன். ஸ்டீவ் வாட்ஸின் இசை பின்னணிக்கு ஓ.கே, பாடல்களுக்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

ஒரு சாதாரண ஆள் மாதிரி வருகிற குமரவேல் சீனை இப்போதுள்ள ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி மாற்றிச்சொல்லும் காட்சிகளில் சேற்றுக்குள் இருக்கும் செந்தாமரை போல மனம் வீசுகிறார்.

இப்படி படத்தில் வருகிற சின்னச் சின்ன கேரக்டர்களைக் கூட பேச வைக்கும் விதமாக முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் ராதாமோகன். பொதுவாக சினிமாவைப்பற்றி

எடுக்கிற படங்கள் என்றால் ரசிகர்களுக்கு வேப்பங்காயாகத்தான் இருக்கும். ஆனால் இந்தப் படத்தை அந்த முடிவுக்குள் கொண்டு வர முடியாது.

ஒவ்வொரு காட்சியையும் நகைச்சுவை இழையோடும் விதத்தில் இயக்கித் தந்திருக்கும் ராதாமோகன் சொல்ல வந்த விஷயத்தையும் எந்த குழப்பமும் இல்லாமல் அழகாக எளிமையாக இயக்கித் தந்திருக்கிறார்.

அவரின் அந்த உழைப்புக்கு பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது ”வலி இல்லாத மனுஷனே இல்ல, வலி இருந்தா தாண்டா அவன் மனுஷன்” போன்ற பொன் பார்த்திபனின் நிஜம் பேசும் வசனங்கள்!

தவிர்க்க முடியாத நாடகத்தனம், ஒரே பேக்-ட்ராப்பில் திரும்பத் திரும்ப வரும் காட்சிகள் ஆகிய சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் காட்சிகளில் எளிமையும், வசனங்களில் வீரியமுமாக நம்மைக் கட்டிப்போடுகிறார் இயக்குநர் ராதாமோகன்!

உப்பு கருவாடு – சரியான மசாலாக் கலவையில் செம டேஸ்ட்டி!

KarunakaranNandita SwethaUppu Karuvaadu - Movie Reviewஉப்பு கருவாடு - விமர்சனம்கருணாகரன்நந்திதா
Comments (0)
Add Comment