உயிரே உயிரே – விமர்சனம்

RATING : 2.5/5

2012 ஆம் ஆண்டு தெலுங்கில் ரிலீசாகி சுமார் 54 கோடி ரூபாயை வசூல் செய்த ‘இஷ்க்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ‘உயிரே உயிரே’.

‘சலங்கை ஒலி’ புகழ் மாஜி நடிகை ஜெயபிரதாவின் செல்ல மகன் சித்து ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார்.

மும்பையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் சித்து அதே விமானத்தில் செம பிகராக வரும் ஹன்ஷிகாவைப் பார்த்ததும் லவ்வுகிறார்.

தனது சின்னச் சின்ன குறும்புகள் மூலம் அவரை கவர நினைக்கிறார். திடீரென்று சென்னையில் பெய்யும் கனமழையால் விமானம் கோவாவுக்கு திருப்பி விடப்பட, அங்கு தனது நண்பனின் திருமணத்தில் ஹன்ஷிகாவுடன் நெருக்கமாகி விடுகிறார் சித்து. அங்கு ஒரு காலிப்பயல்கள் கூட்டத்திலிருந்து ஹன்ஷிகாவை காப்பாற்றி அவருடைய காதலை முழுமையாகப் பெற்றுக்கொண்டு அவருடனேயே சென்னை திரும்புகிறார்.

சென்னைக்கு வந்தவுடன் இருவரின் வீட்டிலும் பேசி திருமணத்துக்கு சம்மதம் வாங்கி விடலாம் என்று நம்பிக்கையோடு இருக்கும் போது தான் விதி ஹன்ஷிகாவின் அண்ணன் அஜய் ரூபத்தில் விளையாடுகிறது.

ஹன்ஷிகாவின் அண்ணன் அஜய் சித்துவின் அக்காவான சாயாசிங்க்கை கல்லூரியில் படிக்கும் போது காதலிக்கிறேன் பேர்வழி டார்ச்சர் செய்ய, அது பொறுக்க முடியாமல் அஜய்யின் காதலை ஏற்க மறுத்து வேறு திருமணம் செய்து கொள்கிறாள் சாயாசிங்.

இதனால் கோபத்தில் உச்சத்தில் இருக்கும் அஜய் தான் காதலித்த சாயாசிங்கின் தம்பி தான் சித்து என்கிற விஷயம் தெரிய வரும்போது தனது தங்கை ஹன்ஷிகாவையும், சித்துவையும் பிரிக்க திட்டம் போடுகிறான்.

அவன் திட்டம் நிறைவேறியதா? குடும்பத்தாரின் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிற சித்துவின் கனவு நிறைவேறியதா? என்பதே கிளைமாக்ஸ்.

சிக்னலில் குழந்தை தவற விடும் பொம்மையை எடுத்துக் கொடுப்பதில் ஆரம்பிக்கும் லாஜிக் மீறல் படம் முழுக்க ஆங்காங்கே தொடர்வது தான் படத்தின் ஓட்டத்துக்கு பெரிய தடை.

ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்த படமென்பதால் நிறைய காட்சிகள் அறுதப்பழசான காட்சிகளாக காட்சியளிக்கின்றது. காதல், செண்டிமெண்ட், குடும்பம், ஆக்‌ஷன் என எல்லா விஷயங்களும் இருந்தாலும் இப்படி ஒரு ஃபேமிலி பேக்கிரவுண்ட் படத்தில் சிரித்து ரசிக்க ஒரு காமெடி சீன் கூட இல்லாதது பெரும் குறை.

முதல் பாதி முழுவதையும் கிட்டத்தட்ட விமான நிலையத்திலேயே மெதுவாக நகர்த்திக் கொண்டு போகிறார் இயக்குநர். அதனாலேயே ரசிகர்கள் போரடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

ஹீரோ சித்து முதல் படமே காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு கதையாக தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். ஆக்‌ஷனில் பாஸ்மார்க் வாங்கினாலும், ஹன்ஷிகாவுடன் நெருங்கி நடிப்பதில் கூச்சப்படுவது திரையில் அப்பட்டமாக தெரிகிறது.

படத்துல டைரக்டர் செஞ்சிருக்கிற நல்ல விஷயங்கள்ல பாராட்ட வேண்டிய விஷயம்னு சொல்லணும்னா அது நாயகியாக ஹன்ஷிகாவைப் போட்டது தான்! படம் முழுக்க அழகு பொம்மையாக வருகிறார் ஹன்ஷிகா. வழக்கமான அவரது அக்மார்க் ‘பப்ளி’ முக பாவனைகளை இதிலும் பார்க்கலாம். பாடல் காட்சிகளில் அழகை ரசிக்கலாம்.

ஹன்ஷிகாவின் அண்ணன் கெட்டவனா? அல்லது நல்லவனா? அல்லது காமெடி பீஸா? என்கிற குழப்பம் படம் பார்க்கிற ஒவ்வொரு ரசிகனுக்கு எழுவது நிச்சயம். ஒரு காட்சியில் கண்ணில் கோபத்தை வைத்துக் கொண்டு ஹீரோவை துரத்துபவர் அடுத்த காட்சியிலேயே அப்பாவைப் பார்த்ததும் பொட்டிப் பாம்பாக அடங்கி விடுவது அவ்வளவு பெரிய வில்லனுக்கு இப்படி ஒரு குணமா? என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

சித்துவின் அக்காவாக வரும் சாயாசிங் அம்மாவாக வரும் உமா பத்மநாபன், அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன் ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கோவா போர்ஷனில் வரும் மாஜி நடிகை ரோகிணி ஏன் திரையில் இவ்வளவு கருப்பாக இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனாலும் கலகலப்பான அவரது கேரக்டர் மனதில் நிற்கிறது.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கோவாவின் அழகையும், விமானத்தின் உள் அழகையும் இஞ்ச் பை இஞ்ச் விடாமல் காட்டியிருக்கிறது. அனூப் ரூபனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரம்மியம்.

இஸ்க் படத்தை இஞ்ச் பை இஞ்ச் சீன் மாற்றாமல் அதை அப்படியே தமிழில் எடுத்துக் கொடுங்கள் என்று தயாரிப்பாளர் தரப்பில் இயக்குநருக்கு நிர்பந்தம் ஏற்பட்டிருக்கலாம்(?!). அதனால் தான் சென்னையில் மழை பெய்தால் விமானத்தை பெங்களூருக்கு திருப்புவார்கள் என்கிற லாஜிக்கையும் மீறி தெலுங்கு படத்தில் கோவாவுக்கு திருப்புவதை அப்படியே இங்கேயும் விமானத்தை கோவாவுக்கு திருப்பி விடுவதாக காட்டியிருக்கிறார்.

ஹன்ஷிகாவின் குறும்புத்தனங்களுடன் கூடிய நடிப்பையும், அழகையும் ரசிப்பதற்காக படத்தை பார்க்கலாம்.

உயிரே உயிரே – காதல் தள்ளாட்டம்!

A. R. RajasekarAmar SinghAnoop Rubenseros internationalHansika MotwaniJaya PradaR. D. RajasekharSiddhuUyire UyireUyire Uyire Movie ReviewVikram Kumarஉயிரே உயிரேஉயிரே உயிரே சினிமா விமர்சனம்சித்துஜெயப்ரதாஹன்ஷிகா
Comments (0)
Add Comment