தமிழில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய பிஜூ மீண்டும் புதுப்படம் ஒன்றை இயக்குகிறார். ”சென்னை பழனி மார்ஸ்” என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும் நிச்சயம் இருக்கும். ஆனால் அந்தக் கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம். அல்லது போராடிப்பார்த்து விட்டிருக்கலாம். சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம்.
அப்படிப்பட்ட ஒரு அற்புதக் கனவை ப்ளாக் காமெடி ஜானரில் ரசிக்க ரசிக்கச் சொல்கிறது இந்தப்படம். விஜய் சேதுபதியை வைத்து ”ஆரஞ்சு மிட்டாய்” படத்தைக் கொடுத்த இயக்குநர் பிஜூ திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு படத்தொகுப்பு இயக்கம் ஆகியவற்றை கவனிக்க, தனக்கே உரிய ப்ளாக் காமெடி உணர்வை வசனமுலாமாகப் பூசி மெருகேற்றியுள்ளார் விஜய் சேதுபதி.
”சென்னை பழனி மார்ஸ்” டிராவல் படமாக இருந்தாலும், அதில் இணைந்து கொள்ளும் பல்வேறு கேரக்டர்கள் படத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர்.
இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ.ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நிரஞ்சன் பாபு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை எழுதியுள்ளார் விக்னேஷ் ஜெயபால்.
மிக சுவாரஸ்யமான ஒரு பயணக் கதையை திரையில் ஜாலியாகக் கண்டுகளிக்க வருகிறது ”சென்னை பழனி மார்ஸ்”. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.