தங்கையை இழந்த மனவலி எனக்கும் தெரியும் : அனிதா வீட்டில் உருகிய விஜய்

நீட் தேர்வால் தனது மருத்துவர் ஆகும் கனவு கலைந்து போனதில் தற்கொலை செய்து கொண்டார் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா.

அவருடைய இறப்புக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ரஜினி, கமல், சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் அனிதாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்தனர். ஆனால் நடிகர் விஜய் மட்டும் இரங்கல் தெரிவிக்காதது அப்போது விமர்சனத்துக்குள்ளானது.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு அனிதாவின் வீட்டுக்கு திடீரென்று நேரில் சென்று அவருடைய புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி விட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் நடிகர் விஜய்.

அவர் அங்கு சென்ற புகைப்படங்கள் நேற்று முழுவதும் சமூகவலைத்தளங்களில் வைரலானது. பிரபலங்கள் பலரும் விஜய்யை பாராட்டினர். என்றாலும் அனிதாவின் வீட்டுக்குச் சென்ற விஜய் அங்கு அவருடைய அப்பா மற்றும் அண்ணனிடம் என்ன பேசினார் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

தற்போது வீட்டிற்கு வந்த விஜய் தங்களிடம் என்ன பேசினார்? என்பதை அனிதாவின் அண்ணன் மணிரத்னம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும்போது… ”வீட்டிற்கு வந்த விஜய் என் தங்கை அனிதாவைப் பற்றி முழுமையாக கேட்டறிந்தார். பிறகு அனிதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த எண்ணியிருந்தேன். நான் வந்தால் சூழ்நிலை சரியாக இருக்காது என்று வரவில்லை. எனக்கும் வித்யா என்று ஒரு தங்கை இருந்தாள், அவள் இறந்து விட்டாள், அவள் இறப்பு எங்களை வெகுவாகப் பாதித்தது.

அதனால், இப்போது உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்று எனக்கும் நன்றாகத் தெரியும். அனிதாவும் என் தங்கை தான், உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு போன் பண்ணுங்க, நான் செய்கிறேன், என்னிடம் கேட்க தயங்காதீர்கள் என்று ஒரு போன் நம்பரை கொடுத்து பணத்தை என் அப்பாவிடம் கொடுத்தார்.
அதோடு எவ்வளவு பணம் கொடுத்தேன் என்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்று அவர் கேட்டுக் கொண்டதாக கூறியிருக்கிறார்.

anithaban neetIlayathalapathyvijay
Comments (0)
Add Comment